சம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களால் பதற்றம்! இராணுவத்தினர் குவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை சம்மாந்துறை பகுதியில் ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்களால் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் உலாவிக்கொண்டிருந்த குறித்த ஆயுதம் தாங்கிய இருவரும் காணி உரிமையாளரை துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் இருவர் அந்தக் காணியில் உலாவிக் கொண்டிருந்துள்ளனர்.

இதனை அவதானித்த காணி உரிமையாளர் தனது காணிக்குள் சென்று பார்த்துள்ளார், அச்சமயம் குறித்த இரு நபர்களும் 56 ரக துப்பாக்கியை எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அருகிலுள்ள இராணுவத்தினருக்கு தெரியப்படுத்திய வேளை இராணுவத்தினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதுவரை எவ்வித ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை எனவும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers