இலங்கை வளர்ச்சி அடைந்து வரும் நாடு அல்ல! வறுமை அடைந்து வரும் நாடு

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்டவர்கள் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்வதாக புள்ளி விபரங்கள் காட்டி நிற்கின்றபோதும், தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி திட்டமான சமுர்த்தி திட்டத்தில் பெருந்தோட்ட பகுதி மக்கள் உள்வாங்கப்படாமை முரண்பாடானதென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பிரதேசத்தில் சமுர்த்தி வலயத்துக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 2561 சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இன்று சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மலையகப் பெருந்தோட்ட சமூகம் வறுமைக்குட்பட்டது என தேசிய புள்ளி விபரங்கள் காட்டி நின்ற போதும் தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி திட்டமான சமுர்த்தியில் அவர்கள் முறையாக உள்வாங்கப்படவில்லை.

சமுர்த்தி ஒரு வறுமை ஒழிப்பு நடவடிக்கை எனில் அது 25 வருட காலம் நடைமுறையில் இருப்பதும், அதன் பயனாளிகள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்வதும் வேடிக்கையானது.

அப்படியாயின் இலங்கை வளர்ச்சி அடைந்து வரும் நாடு அல்ல.வறுமை அடைந்து வரும் நாடு என்றே கொள்ளுதல் வேண்டும். எனவே தான் சமுர்த்தியை வறுமை ஒழிப்பு நிகழ்ச்சியாக மாத்திரம் கொள்ளாமல் சமூக அபிவிருத்திக்கான நிகழ்ச்சியாகவும் கொள்ளுதல் வேண்டுமென எமது அரசாங்கம் அதனை மீளமைத்துள்ளது.

சமுர்த்தி சான்றிதழ் பெறும் ஒருவருக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் உண்டு. அதனைக் கொண்டு அவர்கள் முன்னேற வழிகான வேண்டும். வறுமையை ஒரு தகுதியாக கொள்ளக்கூடாது. சிலர் அதனை தகுதியாக கொண்டு எதையாவது சாதித்துக் கொள்ள நினைக்கிறார்கள்.

வறுமை ஒரு தடை. அதனை தகரத்தெறிய முன்வருதல் வேண்டும். பாடசாலை பருவத்தில் வல்லாரை விற்று வளர்ந்தவன் நான். வறுமையிலும் கற்றுத்தேர்ந்ததால் இன்று எந்த சவாலையும் எதிர்கொள்ளும் துணிவு இருக்கிறது.

நாம் அரசியல்வாதிகளிடமே அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஐம்பது ரூபா என்னாச்சு என முகநூலில் கேள்வி எழுப்பிக்கொண்டு இருப்பதால் தீர்வு கிடைக்காது. அதனை பெற்றுக் கொடுக்கும் வழியை நாங்கள் பார்ப்போம்.

இந்த நாட்டில் எதுவும் இலகுவாக கிடைக்காது. பிரதேச சபை அதிகரிப்பு, பிரதேச சபை சட்டத்திருத்தம், காணி உரிமை, அதற்கான ஒப்பனை, தனிவீடு என எல்லாமே போராடி நாங்கள் வென்றதுபோல் 50 /= யும் வெல்வோம்.

பிரதேச செயலக அதிகரிப்பை நாங்கள் அமைச்சரவை அனுமதி பெற்றுவிட்டோம். இனி அமைப்பது தான் வேலை. ஆனால் இன்னும் சிலர் அதனை கோரிக்கையாகவே வைத்துக்கொண்டு அலைகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers