அவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

அவுஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் எவராக இருந்தாலும் அச்சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு வேலைப் பெறுவதற்கு ஆங்கிலத்திறன் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இந்த சூழலில், அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் சிறப்பான ஆங்கிலத் திறனை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கின்றது என டீகின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2007ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த யூசப் கரிமி, பல்கலைக்கழகத்தில் சென்று படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருந்திருக்கிறார்.

“எனது நண்பர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்பினார்கள், ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு இங்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன,” எனக் கூறியிருக்கிறார் யூசப்.

இதற்காக அவர், ஆங்கில திறனை மேம்படுத்த முன்னுரிமை கொடுத்து கட்டிடக்கலையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். ஆனால், அவருடன் படித்த பெரும்பான்மையானோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் 50 வேலைகளுக்கும் மேல் விண்ணப்பித்து நேர்காணலுக்கு கூட அழைப்பு வராமல் காத்திருக்கிறார் யூசப்.

முஸ்லீம் குடியேறிகள் கல்வி பெற்றுள்ள அளவில் வேலை பெறவில்லை என்கிறது டீகின் பல்கலைக்கழக ஆய்வு.

நல்ல ஆங்கில திறன் கொண்ட, திறனற்ற முஸ்லிம் அல்லாத குடியேறிகளையும் ஆங்கில திறன் கொண்ட, திறனற்ற முஸ்லீம் குடியேறிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் முஸ்லீம் அல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது சிறப்பான அளவில் உள்ளது.

அதுவே முஸ்லீம் குடியேறிகள் விஷயத்தில் நேரெதிராக உள்ளது. திறன் கொண்ட, திறனற்ற முஸ்லிம் குடியேறிகள் இருவருமே ஒரே நிலையில் இருப்பதாக ஆய்விற்கு தலைமை வகித்த பொருளாதார விரிவுரையாளர் டாக்டர் கேஹிட் குவேன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமோஃபோபியா என்ற முஸ்லிம்கள் மீதான அச்சம் இதில் தாக்கம் செலுத்தக்கூடும் எனக் கூறுகிறார் விக்டோரியா இஸ்லாமிய கவுன்சிலின் பொது மேலாளர் அய்மன் இஸ்லாம்.

“வேலைக்கு எடுப்பதில் குறிப்பிடத்தக்க விதத்திலான பாகுபாடு இருக்கின்றது. இது குறித்த பெரிய ஆய்வுகள் இல்லை, ஆனால் முஸ்லிம்கள் இப்பாகுப்பட்டை சந்திக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், நீங்கள் இந்த கலாச்சார

பின்புலத்திலிருந்து வந்துள்ளீர்கள். அதனால் இந்த வேலை தான் உங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்ற முன்அனுமானங்கள் கூட மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றன,” என்கிறார் அய்மன் இஸ்லாம்.

கட்டிடக்கலையில் வேலைபெற தொடர்ந்து தான் விண்ணப்பிக்க போவதாக கூறியுள்ள யூசப், “நீங்கள் முயற்சிக்கவில்லை என்றால் அதனை பெற முடியாது” என்ற நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ளார்.

Latest Offers