வாகரை பகுதி மக்களின் இருப்பிற்கே உலைவைக்கும் மணல் அகழ்வு! சி.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று ஆராய்வு

Report Print R. Mayooran in சமூகம்

மட்டக்களப்பு - வாகரை, பகுதிக்கு வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வாகரை - கட்டுமுறிவு முதல் வெருகல் வரையான கடற்கரைப்பகுதியில் உள்ள இல்மனைற் கனிம வளம் நிறைந்த மணலை சட்டவிரோதமாக அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் தமது இருப்பினை உறுதி செய்வதற்கும், தமது வளத்தினை பாதுகாப்பதற்குமாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 600 தொன் மணல் வீதம் 30 வருடங்களுக்கு அகழ்ந்தெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக காட்டப்படும் ஆவணங்கள் சட்டரீதியாக பெறப்பட்டிருக்கவில்லை என்பதுடன், குறித்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தவோ கருத்தறியவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் மக்களது ஒப்புதல் பெறப்பட்டதாக இணைக்கப்பட்டிருக்கும் கையொப்பப் பட்டியல் கூட போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனை நிரூபிக்கும் வகையில் குறித்த கையொப்பப் பட்டியலில் இருப்பது தமது கையொப்பம் இல்லை என பலர் சத்தியக்கடதாசி மூலம் தந்துள்ளார்கள் என அப்பிரதேச சமூக செயற்பாட்டாளர்கள் சீ.வி.விக்னேஸ்வரனிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.

இவ்விடயம் குறித்து வாகரை கதிரவெளி மக்கள், உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தம்மையும், தமது பிரதேசத்தையும் பாதுகாக்குமாறு சீ.வி.விக்னேஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதையடுத்து, நேற்று நண்பகல் அவ்விடங்களுக்கு சீ.வி.விக்னேஸ்வரன் சென்று ஆராய்ந்ததுடன் ஆவணங்களை பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதித்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவரான நீங்கள் தான் இவ்விடயத்தில் எமக்கு உறுதுணையாக இருந்து நீதியை பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.