எமது மக்களை தொடர்ந்தும் இராணுவக்கெடுபிடிக்குள்‌‌ வைத்திருக்கவே அரசு விரும்புகிறது

Report Print Gokulan Gokulan in சமூகம்

எமது மக்களை தொடர்ந்தும் இராணுவக்கெடுபிடிக்குள்‌‌ வைத்திருக்கவே இலங்கையின் ஒவ்வொரு அரசும் விரும்புகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், குரும்பசிட்டி கிராம மக்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்களின் வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது. எமது அடிப்படை அரசியல் உரிமைக்காக போராடி கொண்டு இருக்கிறோம். மறுபுறத்தில் நிலமீட்பிற்காக போராடிக் கொண்டு இருக்கிறோம்.

இன்னொரு புறம் காணாமல் போனவர்களை மீட்பதற்கான போராட்டம். இளைஞர், யுவதிகள் வேலைவாய்பிற்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தங்களின் வாழ்க்கைக்காகவே போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அண்மையில் தான் இந்த பிரதேசம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் அருகில் உள்ள கிராமங்களை விடுவிக்காமல் தொடர்ந்தும் இராணுவமே வைத்திருக்கிறது‌. விவசாயம் செய்து எங்கள் வாழ்வியலை மேம்படுத்த கூடிய நிலங்களை எல்லாம் இராணுவம் கையகப்படுத்தி இருக்கிறது.

நாங்கள் சுயமாகவும் மேலெழும்பி விடாமலும் தடுப்பதுதான் இவர்களின் நோக்கமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த நிகழ்வில் பிரதேசசபையின் வட்டார உறுப்பினர் தங்கராசா, நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் லோகன், ஆலய நிர்வாகத்தினர், கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.