ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா

Report Print Kumar in சமூகம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று பாரம்பரிய கலாச்சார கலைஞர்களின் பவனியுடன் கொடிச்சீலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கையில் தமிழர்களின் வரலாற்றினை உலகுக்கு எடுத்துக்காட்டும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இராம பிரான் வழிபாடுகளை மேற்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

இராமபிரானால் தண்டம் ஊன்றி உருவாக்கப்பட்ட தீர்த்தக்கரையினையும் அதில் உயிர்நீர்த்தவர்களுக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றும் தீர்த்தக்கரையாக மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளம் காணப்படுகின்றது.

இன்று காலை விசேட அபிசேகம் மற்றும் யாகம், பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டப பூஜை கொடிக்கான பூஜைகள் நடைபெற்று கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் நாதவேத மணி முழங்க, நண்பகல் 12.00 மணியளவில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஆலயத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவ பெருவிழா ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய உற்சவத்தில் வடகிழக்கின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிஸாரும் படையினரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 30ஆம் திகதி தேர் உற்சவம் நடைபெறவுள்ளதுடன் 31ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.