ஆடி அமாவாசை தொடர்பிலும் நீதிபதி இளஞ்செழியனால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Report Print Sujitha Sri in சமூகம்

வருகின்ற 31ஆம் திகதி ஆடி அமாவாசையன்று கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தில் இந்து பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை தடுக்கக்கூடாது என்ற தடை உத்தரவு கொடுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வெந்நீரூற்று பகுதிக்கு அருகாமையில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் வருகின்ற 31ஆம் திகதியன்று கன்னியா வெந்நீரூற்று ஆலயத்தில் இந்து பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை தடுக்கக்கூடாது என்ற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மேலும் கூறுகையில்,

பக்தர்கள் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை அன்று சிறப்பு வழிபாடுகளை அனைவரும் செய்வது வழக்கம்.

வருகின்ற 31ஆம் திகதி ஆடி அமாவாசையன்று இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுப்பார்கள். அப்படி யாரும் பக்தர்களை தடுக்கக்கூடாது என்ற தடை உத்தரவும் இப்போது கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்து பக்தர்கள் ஆடி அமாவாசையன்று எந்த தடையுமின்றி வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.