இரணைமடுக்குளத்தின் விசாரணை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

Report Print Theesan in சமூகம்

மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் இரணைமடுக்குளம் தொடர்பிலான விசாரணை குறித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை இன்று அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரணைமடுக்குளத்திலிருந்து வெளியேறிய வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக அனர்த்தங்கள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனால் இரணைமடுக்குள அனர்த்தம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் 11.01.2019 இல் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு முதலாவது விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

முதலாவது அறிக்கையில் குள நிர்மாணத்தில் மோசடிகள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட வடமாகாண ஆளுநர் இரண்டாம், மூன்றாம் கட்ட விசாரணையினை மேற்கொள்ள பணித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கட்ட அறிக்கை ஆளுநருக்கு கிடைத்துள்ளதாக 29.06.2019 ஊடகமொன்றுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இது கிட்டத்தட்ட 300 பக்கங்களை கொண்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையினை சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்த பின் அதனை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் விசாரணை அறிக்கையினை வெளியிடுவது தொடர்பில் சில பேர் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு பாரியளவிலான மோசடிகள் இடம்பெற்றிருப்பது தெரியவந்தும், அறிக்கையினை வெளியிட்டு அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை இதுவரை ஆளுநர் மேற்கொள்ளாது இருப்பதன் காரணம் என்ன?

உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டால் தான் மீளவும் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதை தவிர்க்க முடியும்.

மேற்படி மோசடிகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவருக்கு அதே பதவியில் முல்லைத்தீவு நீர்ப்பாசண திணைக்களத்திற்கு மாற்றம் கிடைத்துள்ளது. அவரை இடமாற்றுவது அவருக்குரிய தண்டனை அல்ல.

இவ்வாறிருக்கையில் ஏற்கனவே ஒரு மோசடியில் ஈடுபட்டுள்ள ஒருவரை மீளவும் புதிய செயற்திட்டங்களில் உள்ளீர்ப்பது பொருத்தமான செயற்பாடல்ல.

இதேபோல் முன்னைய ஆண்டுகளில் நெல்சிப் திட்டம் கொண்டுவரப்பட்டு அத்திட்டத்திலும் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது 03 வருடங்களாகியும் நெல்சிப் திட்ட அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாம் அதற்கான தகவல்களையும் கோரியுள்ளோம். இதனைப்போலவே இரணைமடுக்குள விசாரணை அறிக்கைகள் மூடிமறைக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அறிக்கையினை மொழிபெயர்ப்பதாக குறிப்பிட்டு 03 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் அறிக்கை தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையோ கருத்துமோ வெளியிடப்படவில்லை.

எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென நாம் கேட்டுக்கொள்கன்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers