மலையகத்தின் பெரும் சொத்து மூர்ச்சையானது

Report Print Jeslin Jeslin in சமூகம்
165Shares

எங்கும் பச்சை பசேலென கம்பளம் விரித்தாற் போல தேயிலையும் அழகான புல்வெளிகள் மற்றும் மலைத் தொடர்களைக் கொண்ட மலையகம் பார்ப்பதற்கு ஓர் தனி அழகு.

ஆனால் அதே தேயிலைத் தோட்டத்தின் மக்கள் குடியிருப்பு பகுதிக்குப்போனால், ஏழ்மையும் வறுமையும் நிரந்தரமாகக் குடி கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம். மனதைப் பிழியும் சோகத்தையே அந்த காட்சிகள் தரும். அது அவ்வளவு ரசிக்கும் படியாக இருக்காது.

இவ்வாறான ஒரு சூழலில் பிறந்து வளர்ந்து பல இலட்சியங்களை அடைவது என்பதே குதிரைக் கொம்புதான்.

ஆனால் அதனையும் தாண்டி மலையகத்தின் சாதனைத் தலைவனாக மிளிர்ந்த ஒரு அற்புத மனிதரை இன்று எமது மண் இழந்து தவிக்கின்றது.

மலைநாட்டான் என்றால் படிக்காத பட்டிக்காட்டான் என பலரின் எண்ணங்கள் இருந்த சமயத்தில், அதனை உதறித் தள்ளி பேராசிரியர் ஆனவர் பேராசிரியர் மு.சின்னத்தம்பி அவர்கள்.

கண்டி, ரங்கல என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் அவர்கள் நேற்றையதினத்தினை தனது வாழ்நாளின் இறுதி நாளாக மாற்றிக் கொண்டார்.

மலையக மண் தந்த முதலாவது பேராசிரியர் என்ற சாதனைக்குரிய மு.சின்னத்தம்பி அவர்களின் இழப்பு எமது சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று.

பிரிட்டனில் உயர் கல்வி கற்ற பேராசிரியர் கல்வி புரட்சிமூலம் மலையகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்.

நூல்கள், கட்டுரைகள், ஆக்கங்கள் ஊடாக மலையக சமூகத்துக்காக பல வழிகளிலும் சேவை செய்துள்ளார்.

மலையக மக்களின் வாழ்வியலை அவ்வாறே பிரதிபலிக்கும் வகையில் பேராசிரியர் வெளியிட்ட தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும் எனும் ஆய்வு நூல் காலம் கடந்தும் பேராசிரியரை வாழவைக்கும் ஒரு அற்புத படைப்பு.

பேராசிரியர் மு.சின்னத்தம்பி ஒரு மேடையைில் வைத்து பேசும்போது,

நான் தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன், தேயிலைத் தொழில் மற்றும் அங்கு வாழும் மக்கள் பற்றிய போதிய அனுபவமும் பரிச்சயமும் எனக்கு உண்டு.

பல்கலைக்கழகத்துக்குள் சென்றதும் நான் தெரிவு செய்துகொண்ட துறை பொருளியல் துறை. அந்தத் துறையில் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதவும், பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கவும் அழைக்கப்படும்போது நான் இந்த தேயிலை மற்றும் அங்கு வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.

இவரின் இந்த பேச்சு மலையகத்தவரின் நிலையை அவர் சர்வதேசத்திற்கு அறிவிக்க அவர் எடுத்த முயற்சிகளை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது.

இன்று மலையகத்தைச் சார்ந்த பலர் பேராசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் இருக்கின்றார்கள் என்றால் அதற்கும் மலையகத்தில் ஒரு கல்விச் சமூகம் உருவாவதற்கும் வித்திட்டவர் மு.சின்னத்தம்பி அவர்களே.

இவர் போன்றவர்கள் மலையகத்தவரின் வரலாற்றுச் சான்றுகள் மாத்திரமல்ல, மலையகத்தவரின் வரலாறாகவும் இருக்கின்றனர்.