38 தாய்மார் மரணம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் பாரிய போராட்டத்திற்கு முஸ்தீபு

Report Print Thileepan Thileepan in சமூகம்
38Shares

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி வந்த 38 தாய்மார் மரணமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் சங்க தலைவி சண்முகம் சரோஜினி தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

இரண்டு வருடகாலம் முடிவடைந்து எமது கோரிக்கைகளுக்கு எந்த தீர்வும் வரவில்லை. எனினும் நாம் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

முல்லைத்தீவில் மரணடைந்த திரேசம்மா என்ற எமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருடன் சேர்த்து 38 பேர் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மரணித்துள்ளனர்.

இது தொடர்பில் எவரும் கண்டுகொள்வதாக இல்லை. எனவே ஊடகத்தின் மூலமாக சர்வதேசத்திற்கும் இவ்விடயத்தினை தெரியப்படுத்துகின்றோம்.

அந்தவகையில் நாம் போராட்டமொன்றினையும் எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்த தீர்மானித்துள்ளோம்.

அப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும் என மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்.

38 பேர் இறந்த நிலையில் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலர் உடல் தளர்வுற்ற நிலையில் காணப்படுகின்றனர். இந்த நிலையில் தான் நாம் நீதியை கோரி நிற்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.