தமிழர் தாயகத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் திட்டமிட்ட அரச ஆதரவு, பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து விரைவில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றினை நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்தப்படும் என நேற்று தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு கூடித் தீர்மானித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்காமல் காலம் கடத்தும் அரசின் கபடத்தனத்தை சர்வதேச உலகிற்கு தெரியப்படுத்தவும் காணாமல் போனவர்களின் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை வலியுறுத்தும் வகையில் குறித்த பேரணி் இடம்பெறவுள்ளது.
வடக்கு - கிழக்கு மாகாணம் உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் பங்கேற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே தமிழர் தாயகத்திலுள்ள அனைத்துப் பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், விவசாய, கடற்றொழில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் என்பவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால் அனைத்து பொது அமைப்புக்களின்
பிரதிநிதிகளையும் இச்சந்திப்பில் தவறாது கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.