நாடெங்கிலும் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பட்டதாரி பயிலுனர் வழங்கும் நிகழ்வு தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 193 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 40 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் பட்டதாரிகளுக்கான பிரதமர் தலைமையில் இடம்பெற்ற தேசிய நியமனம் வழங்கும் நிகழ்வின் போது வழங்கப்பட்டுள்ளதுடன், மிகுதியான 153 பட்டதாரி பயிலுனர்களுக்கு இதன்போது நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.

மேலும் இக்குறித்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சன்திப் சமரசிங்க, மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலபதி, பிரதேச செயலாளர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நியமனம் இன்று மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான 2ஆம் கட்ட பட்டதாரிப்பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனின் பங்கேற்புடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு

அரசின் வாக்குறுதிகளுக்கு அமைய பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாடாளாவிய ரீதியில்; நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேசசெயலக டேபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உள்வாரி 203 பட்டதாரிகளுக்கு நியமனம் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் அமீர்அலி கலந்துகொண்டார். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் சீ.யோகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும்.

அரசாங்க உயர் அதிகாரிகள் பிரதேச தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள் பட்டதாரிகள் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் மேற்படி பட்டதாரிகளுக்கு ஒரு வருட கால பயிற்சிகாகவும் இந்நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

செய்தி - ருசாத்

கிளிநொச்சி

குறித்த பட்டதாரிகளில் 40 பேர் ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் பெற்றுக்கொண்ட நிலையில், இன்று 101 பட்டதாரிகளிற்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது, குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி தொழில் பயிற்கி வளாக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டு பட்டதாரிகளிற்கு நியமன கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

செய்தி - சுமன்

அம்பாறை

வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அம்பாறையில் ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரியில் நடைபெற்றது.

ஒரு வருட பயிற்சியினை பெற இவ்வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட உள்வாரி வெளிவாரி பட்டதாரிகள் 16800 பேர்களின் நியமனக்கடிதங்கள் அலரிமாளிகை மற்றும் மாவட்டச் செயலகங்கள் ரீதியாகநியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 631 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயகா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே விஷேட அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள்களான எம்.ஜ.எம்.மன்சூர் எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் பட்டதாரிகள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில்பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதத்தை பிரதம அதிதி வழங்கி வைத்தார்.

இதில் மும் மொழி மூல பட்டதாரிகளும் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இதன் மூலம் மாவட்டச் செயலகம் பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு இரண்டாம் திகதி முதல் தங்களது கடமையை பொறுப்பேற்கும் வகையில் இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா

வவுனியாவில் 159 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு.

வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக பட்டப்படிப்பை முடித்தும் வேலைவாய்ப்பின்றி இருந்த 159 பேருக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தலைமையில் இன்று அந்த கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்பதுயுர்தீன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறீஸ்கந்தராசா, தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர், து.நடராசசிங்கம், அரச அதிகாரிகள், பட்டதாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி - தீசன்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று பட்டதாரி பயிலுநர்கள் 1253 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கே இந்த பட்டதாரி பயிலுநர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறு நியமனம் பெற்றவர்கள் யாழ்மாவட்ட செயலகத்திற்கும், வடமாகாண சபைக்கும் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

செய்தி - சுமி