முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்தை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தடுப்பது ஏன்?

Report Print Gokulan Gokulan in சமூகம்

கடந்த சில வாரங்களாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் பற்றிய பல கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.

இத்தொன்மை வாய்ந்த சட்டச் சீர்திருத்தம் பற்றிய போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கடந்த வருட முற்பகுதியில் நீதியரசர் சலீம் மர்சூப் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட இரு தொகுதிப் பிரேரணைகளிடையே காணப்படுகின்ற வேறுபாட்டைக் களைவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தற்போதுதான் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர் என கட்டுரையாளர் சிதாறா சிறீன் அப்துல் சறூர் தெரிவித்துள்ளார்.

அவரது கட்டுரையில் மேலும்,

'ஒரே நாடு ஒரே சட்டம்' கோட்பாடு உட்பட முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் மீதான பல்வேறுபட்ட வீரியம் மிக்க கருத்தாடல்களின் இறுதி விளைவே முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவைப்பாட்டை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது சுமத்தியுள்ளது என்பதே எனது கருத்தாகும்.

பிரதம மந்திரியும் இது தொடர்பில் அழுத்தம் கொடுத்துள்ளார். ஏனெனில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டச் சீர்திருத்தமானது ஏதோ ஒரு விதத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் விளைவாக எழுந்துள்ள இஸ்லாமியத் தீவிரவாதாம் வளர்கின்றது என்ற எண்ணக் கருவை மறுப்பதற்குக் கையாளப்படுகின்ற நடவடிக்கைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா (அ.இ.ஜ.உ) இன்று மாத்திரமல்ல பல வருடங்களாக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பாரிய முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது.

இச்சட்டச் சீர்திருத்தச் செயற்பாடுகளில் நீண்ட காலமாகச் சேவையாற்றிய செயற்பாட்டாளர்கள், பெண்ணுரிமையையும் பால்நிலை சமத்துவத்தையும் அங்கீகரிக்காத பிடிவாதம் கொண்ட ஆணாதிக்கவாதிகளாகிய இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் களைப்படைந்துள்ளனர்.

தமது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் குழுவினருக்கு ஒன்பது வருடங்கள் எடுத்ததற்கான ஒரே காரணம் அ.இ.ஜ உலமாவின் பிரதி நிதிகளாக இக்குழுவில் அங்கம் வகித்த எம்.ஐ.எம். றிஸ்வி (இருபது வருடங்களாக அ.இ.ஜ உலமாவின் உயர் பதவியைத் தன்னிடமே தக்க வைத்திருக்கும் ஒருவர்) மற்றும் அதன் செயலாளர் முபாரக் போன்றவர்களினால் புலமை வாய்ந்த இஸ்லாமிய அறிஞர்களுடனும், சட்டவல்லுனர்களுடனும் ஒன்றித்துப் போக முடியாமையேயாகும்.

சட்டச் சீர்திருத்தச் செயற்பாடுகளின் இந்த இறுதித் தறுவாயில் அதனைச் சட்ட விரோதமாகக் கைப்பற்றுவதன் மூலமாக சட்டச் சீர்திருத்தத்திற்கான பிரேரணைகளை ஆக்கும் போது, (அ.இ.ஜ உலமா உட்பட)சகல சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி, உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் குழுவினால் ஆக்கப்பட்ட அறிக்கையை அ.இ.ஜ.உ தலை கீழாக மாற்றியுள்ளது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 14 சீர்திருத்த முன்மொழிவுகளைக் கொண்ட ஆவணமொன்று 15.07.2019 இல் வெளியானது.

அதனை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. பிரதம மந்திரி, கௌரவ ஹலீம் அவர்களையும் (முஸ்லிம் கலாச்சார விவகார அமைச்சர்) கௌரவ தலதா அத்துக்கோரள (நீதி அமைச்சர்) அவர்களையும் கூட்டாகக் கையொப்பமிட்டு அமைச்சரவை அங்கீகாரத்திற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்குமாறு வேண்டியிருந்தார்.

ஆனால் நாம் கடந்த இரண்டு வாரங்களாகக் காண்கின்ற அ.இ.ஜ. உலமாவின் நடவடிக்கையானது ஒரு அடாவடித்தனத்திற்குச் சமமானதேயன்றி வேறில்லை.

இனவாதத்தைப் பரப்புவதால் ஞானசார தேரரையும், ரத்ன தேரரையும் இனவாதிகள் என அழைப்போமாகில், அ.இ.ஜ.உலமாவின் றிஸ்வியையும் அவர்களது குழுவையும் தமது மதத்தவர்களுக்கு எதிராக அதே நடவடிக்கைகளையே மேற்கொள்வதனால் அவர்களையும் அதே இனவாதிகள் என்றே அழைக்கப்பட வேண்டும்.

இச்சட்டச் சீர்திருத்தத்தின் செயற்பாடுகள் தங்களது அமைச்சின் விவாகரம் அல்ல என்றும் நீதியமைச்சின் பொறுப்பு எனவும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் உயர் அலுவலர்கள் இருவர் என்னிடம் கூறினர்.

அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தைக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அமைச்சர் ஹலீம் காட்டிய தயக்கம் அ.இ.ஜ. உலமாவின் சர்வாதிகாரத்திற்கு எதிராகச் செயற்பட விரும்பாமையினால் ஆகும்.

பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையே அ.இ.ஜ.உலமா எவ்வாறு தமது முழங்காலில் மண்டியிட வைக்கின்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் இணங்கிக் கொண்ட 14 விடயங்களை உள்வாங்கி இச்சட்டத்தைச் சீர்திருத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு வரலாற்றுத்துரோகம் இழைத்தமைக்கும், முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்தமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புதாரிகளாவார்கள் என எச்சரித்து சிரேஸ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களுக்கு அ.இ.ஜ. உலமா 18.07.2019 இல் கடிதமொன்றை அனுப்பியது.

அதன் பின்னர் அவர்கள் சீர்திருத்தம் வேண்டும் என்று கூறிய அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக முஸ்லிம் வர்த்தகர்களையும், குழுக்களையும் அணிதிரட்டினர்.

பிரேரிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் சட்டவாக்கத்தை தடுத்தனர். இவர்கள் தற்போது ஏனைய குழுக்களையும் (குறிப்பாக தரிக்கா போன்ற மதக்குழுக்கள்) பிற்போக்குவாத ஆணதிக்க முஸ்லிம் குழுக்களையும் இணைத்துக் கொண்டு, முஸ்லிம் விவாக விவகாரத்து சட்டத்தை தமக்கு ஏற்ற விதத்தில் திருத்துவது அல்லது முற்று முழுதாகச் சீர்திருத்தத்தைத் தடுப்பதற்கும் மும்முரமாக செயற்படுகின்றனர்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட சீர்திருத்தத்திற்கான மர்சூப் குழுவின் ஒரு பகுதியினராக இருந்த அதேவேளையில், இவ் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டமானது அல்லாஹ்வினால் ஆக்கப்பட்ட ஷரீஆ சட்டம் எனவும், அதனை யாரும் தொட முடியாது எனவும் பள்ளிவாசல் மிம்பர்களில் இருந்து பிரச்சாரம் செய்தமையானது அ.இ.ஜ. உலமாவின் நயவஞ்சகத்தனத்தை தெளிவுபடுத்துகின்றது.

அமைச்சர்களான றவூப் ஹக்கீம், ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபா உள்ளடங்கிய குழுவில் றிஸ்வியும் நான்காவது உறுப்பினர் என்ற அவர்களது விளம்பரம் அவர்களது போலித்தனத்தின் தொடர்ச்சியைக் காட்டுகின்றது.

அ.இ.ஜ. உலமாவிற்கு வேண்டியது என்ன? பின்வரும் விடயங்களிலான சீர்திருத்தங்களைத் தடுப்பதற்கு அது காட்டி நிற்கும் ஆர்வம் தொடர்பில் ஒருவர் கவனமாக அவதானிக்கும் போது விடை தெளிவாகும்.

  1. பெண் காதியும் மற்றும் காதிகளாகத் தகுதி வாய்ந்த சட்டத்தரணிகள் நியமிக்கப்படுதல்
  2. திருமணத்திற்கான கட்டாயப்பதிவு
  3. திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 18 வயதை நிர்ணயித்தல், பெண் காதியும் மற்றும் காதிகளாகத் தகுதி வாய்ந்த சட்டத்தரணிகள் நியமிக்கப்படுதல்

காதி நீதிமன்றக் கட்டமைப்பினுள் அ.இ.ஜ. உலமா கடந்த 10 வருடங்களாக தங்களது நிலையை பரவலாக்கியுள்ளது. இச்சட்டமானது ஷரீஆவினுள் அல்லது இஸ்லாமியக் கட்டமைப்பினுள் பொருள் கோடப்பட வேண்டுமென கூறுவதன் மூலம் பல பிரதேசங்களில் காதிகளாகத் தங்களது உறுப்பினர்களை நியமித்துக் கொண்டுள்ளனர்.

ஹலால் பத்திரத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தது போல அகில இலங்கை ரீதியில் 65 காதி நீதிமன்றங்களையும் தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவது அ.இ.ஜ. உலமாவின் தேவையாகும்.

இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை தமது பிடியினுள் வைத்துக் கொண்டு மேலும், தமது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதே அ.இ.ஜ.உலமாவின் நோக்கமாகும்.

அத்துடன் தங்களுக்குத் தேவையான வழியில் இஸ்லாத்தை பொருள்கோடல் செய்து தமது தீவீரவாத போக்குடைய இஸ்லாமிய விழுமியங்களை காதிநீதிமன்றத்தினூள் உட்தினிப்பதே இவர்களின் நோக்கமாகும்.

இதன்மூலம் இலங்கையில் இரண்டு தசாப்த காலமாக அவர்களினால் ஊக்கவிக்கப்பட்ட வஹாபி கொள்கையுடன் கூடியதான அல்குர்ஆனின் அவர்களது பொருள்கோடல்களுக்கு இசைந்துள்ளது என்பதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது.

திருமணத்திற்கான கட்டாயப்பதிவு

நிபந்தனைக்குட்பட்ட பலதார மணத்திற்கு அ.இ.ஜ. உலமா உடன்பட்ட போதும், திருமணத்திற்கான கட்டாயப் பதிவை அவர்கள் எதிர்த்தனர். தற்போது பல பெண்கள் அமைப்புகள் முஸ்லிம் திருமணத்தின்போது கட்டாயாப் பதிவு இல்லாமையால் ஏற்படும் சிக்கலான பாதிப்பைப் பதிவு செய்துள்ளனர்.

திருமணப்பதிவு இன்மையால் முஸ்லிம் ஆணொருவர் எத்தனை திருமணம் செய்துள்ளார் என்பதை அறிவதற்கு வழியேதுமில்லை. ஆண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி நான்கிற்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்த சந்தர்ப்பங்களை நான் கண்டுள்ளேன்.

ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஒருவருக்கு 13 மனைவிமார் இருந்துள்ளனர். உண்மையில் இச் செய்கையானது 'அந்தப்புரம்' ஒன்றை அங்கீகரிப்பது போலாகும் அ.இ.ஜ. உலமாவின் உலமாக்கள் தங்களது ஆண்களை பல பெண்களுடன் பாலியல் உறவு கொள்வதை ஆதரிக்கும் செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.

ஏனெனில் கடமையாக்கப்பட்ட திருமணப் அன்பளிப்பு அல்லது மஹர் இன்றி, சாட்சியும் பதிவும் இன்றி திருமணபந்தத்தை அனுமதிப்பதலாகும் நான் வேலை செய்கின்ற ஒரு நிறுவனத்தில் இந்த வருடம் மாத்திரம் 658 பதிவு செய்யப்படாத திருமணம் சம்பந்தமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை இரண்டாம் அல்லது மூன்றாம் திருமணங்கள் ஆகும். சட்டபூர்வமான திருமணப்பதிவு இன்மையால் இம்மனைவியர் தங்களது பிள்ளைகளது பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியாமலும், தங்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப முடியாமலும், தங்களது கணவன் தங்களைக் கைவிட்டுச் சென்றால் அல்லது வேறு பெண்ணைத் திருமணம் செய்தால் தங்களது பிள்ளைகளுக்கான தாபரிப்பைக் கோர முடியாமலும் உள்ளனர்.

திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லை

ஏனைய சமூகங்களின் திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லைக்கு இசைவான வயதெல்லைபோலவே முஸ்லிம் சமூகத்தினதும் திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என பெண்கள் குழுக்கள் கோருகின்றனர்.

பெண்களின் திருமண வயதெல்லையை நியமிக்கும் இச்சீர்திருத்தம் தொடர்பாக எதிர்க்கின்ற அ.இ.ஜ. உலமா திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 18இனை நியமிக்கும்போது திருமணத்தின் முன்னரான பாலியல் உறவு திருமணத்திற்கு அப்பால் பிறக்கின்ற பிள்ளைகள் போன்ற விடயங்கள் அனுமதிக்கப்படும் நிலை உருவாகும் என அவர்கள் வாதிடுகின்றனர்.

இது மிகத்தொன்மையான நியாயப்படுத்தலாக அமைவதுடன் மிகச் சிறிய வயதில் இருந்தே முஸ்லிம் பெண்களின் பங்களிப்பை அ.இ.ஜ உலமா பாலியல் நிலைக்கு உட்படுத்துவதையுமே குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

அ.இ.ஜ உலமா பெண்களின் திருமண வயதெல்லையை மாத்திரமே கவனத்திலெடுப்பதற்கான காரணம் என்ன? 18 வயதிற்கு முன்னமே ஒரு பெண் பிள்ளை பாலியல் உறவுக்கு உட்பட்டிருந்தால், அதனைத் தடுப்பதற்குரிய வழி நிச்சயமாகத் திருமணம் இல்லை.

மேலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்ற ஒவ்வொரு முறையும் அப்பெண்பிள்ளை பலவந்தமான திருமணத்தினூடாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றார்களா? அல்லது உடலியல் ரீதியான மாற்றம் ஏற்பட்ட உடனேயே அப்பிள்ளைகள் குழந்தைகளை பெற்றெடுக்க ஆரம்பிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்களா?

இது முஸ்லிம் சனத்தொகையை அதிகரிப்பதற்கும் சந்ததியை உருவாக்கவும் செய்யப்படுகின்ற பலவந்தச் செயற்பாடா? 'ஆம்' எனில் இலங்கை இன்னும் சில தசாப்தங்களில் ஒரு இஸ்லாமிய நாடாகப் போகின்றது எனக் கூறும் சில தீவிரவாதத் பௌத்த துறவிகள் மற்றம் சில இனவாத பாராளுமன்ற உறுப்பினர்களால் கிளப்பி விடப்பட்ட அச்சம் சரியானதாக நியாயப்படுத்தப்படமாட்டாதா?

அல்லது இளம் பெண்களும் சிறுமிகளும் இவர்களது பாலியல் இச்சைகளையும், கனவுகளையும் பூரணப்படுத்த வேண்டுமென நினைக்கிறார்களா? இதைச் சொல்வதற்கு இலகுவான வழியொன்றில்லை.

திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 18ஆக ஆக்குவதையும், முஸ்லிம் திருமணத்திற்கான கட்டாயப்பதிவை வன்மையாக எதிர்ப்பதன் மூலம் அ.இ.ஜ. உலமாவானது முஸ்லிம் பெண்களது சுகாதாரம், மனநலம், நாம் வாழ்கின்ற நாட்டின் சமுதாய விதிமுறைகள் என்பனவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் முஸ்லிம் பெண்களைப் பாலியல் இயந்திரங்களாகத் தாழ்த்துவதற்கும், கணவன்மாரின் பாலியல் இச்சைகளைத் திருப்திப்படுத்துவதற்கும், பிள்ளைகளைப் பெறுவதற்கும் என்ற வகையில் மாற்றுவதற்கு முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தைப் பயன்படுத்துகின்றது.

சட்டத்தரணிகளும், பெண்களும் காதிகளாக நியமிக்கப்படுவதை எதிர்ப்பதன் மூலம் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத பெண்களைவிட தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குடியியல் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக முஸ்லிம் பெண்கள் நியமிக்கப்படுகின்ற போதிலும் நீதிபதிகளாகுவதற்குரிய உளவியல் தராதரம் பெண்களுக்கு இல்லை என தாம் நம்புவதை அ.இ.ஜ உலமா சுட்டிக் காட்டுகின்றது.

இதற்கு காரணம் முக்கியமாக அவர்கள் தமது எண்ணத்தை ஒரு எதேச்சத்தரமான நீதிமன்றக் கட்டமைப்பின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவும், அவர்களது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏற்படுத்தியுள்ள சட்டங்கள் தொடர்பிலான மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல் தங்களுக்கேற்ற விதத்தில் பொருள் கோடல் செய்யும் முகமாக ஷாபி மத்ஹப்பை கடுமையாகப் பின்பறறும் ஒரு கட்டமைப்பாக காதிநீதிமன்றங்களை மாற்றுவது இவர்களது எண்ணமாகும்.

அ.இ.ஜ உலமா முஸ்லிம் சமூகத்தின் குரலாக இருக்கக் முடியாது. முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டச் சீர் திருத்தம் தொடர்பில் அ.இ.ஜ உலமாவுடன் பேசுவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

தற்போது மீண்டும் சீர்திருத்தச் செயற்பாடுகளை சீர்குலைப்பவர்களாகவே அ.இ.ஜ. உலமா காணப்படுகின்றது. இவர்களது கருத்துகள் மர்சூப் குழுவினரால் ஏற்கனவே பெறப்பட்டுக் அறிக்கையில் உள்ளடக்கபட்டுள்ளது.

பல வருடங்களாக நடைபெற்று வருகின்ற சீர்திருத்தச் முன்னெடுப்புக்களை அ.இ.ஜ. உலமா மீண்டும் திசைமாற்றுவதற்கு பலவிதமான ஒளிவுமறைவான முயற்சிகளை பல தீவீரவாத பிற்போக்கு சிந்தனை உடைய அமைப்புக்களுடன் சேர்ந்து செய்கின்றது.

இது அவர்களது உள்நோக்கத்தையும் தமது சமூகத்திற்குள் பெண்ளுக்கும் சிறுமிகளுக்கும் நடக்கின்ற அநியாயங்களை குழிதோன்டி புதைக்கின்ற முயற்சி ஆகும்.

ஆகையினால் அ.இ.ஜ.உ சட்ட சீர்த்திருத்திற்குள் வருவதை தடை செய்யப்பட வேண்டும். இவர்களது செயற்பாடானது முழு முஸ்லிம் சமூகத்தினையும் பின்தங்கிய நிலையில் வைத்திருப்பதே ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.