நீதிபதி இளஞ்செழியன் விதித்த தீர்ப்பு சரியானது! கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - வெள்ளை மணல் பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளை மணல் பகுதியில் தாஜூதீன் சமூன் என்பவருக்கு மரணம் விளைவித்தமை தொடர்பிலும் இன்னும் சிலருக்கு காயங்களை விளைவித்தமை தொடர்பிலும் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில், 2009 பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதலாவது சந்தேகநபரான 41 வயதுடைய ஷரீப்தீன் முஹம்மட் பௌசர் என்பவருக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய இந்த தீர்ப்பு பிழையானது என தெரிவித்து அவருடைய தீர்ப்பிற்கு எதிராக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் மேல்முறையீடு வழக்கு கொலை குற்றவாளியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனை செய்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொழும்பு மேல் முறையீட்டு தீர்ப்பை வாசித்து காண்பிப்பதற்காக குறித்த குற்றவாளியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று கட்டளையிட்டுள்ளார்.

குறித்த கொலை குற்றவாளி தற்பொழுது வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.