வவுனியாவில் இப்படியும் மனிதர்களா? நெகிழ வைக்கும் செயல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

பேருந்து தரிப்பிடத்தில் மூன்று பிள்ளைகளுடன் அநாதரவாக நின்ற பெண்ணுக்கு பணம் வழங்கி உதவிய நல் உள்ளங்களின் மனதை நெகிழ வைக்கும் செயற்பாடொன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கும் குறித்த பெண்ணின் கணவன் வவுனியாவிற்கு வேலைக்கு செல்வதாக தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இரண்டு மாதங்கள் கடந்தும் கணவன் வீடு திரும்பவில்லை இதனையடுத்து குறித்த பெண் அவரது மூன்று பிள்ளைகளுடன் கணவனை தேடி இன்று வவுனியாவிற்கு வருகை தந்து அதிகாலை 3.00 மணிமுதல் வவுனியா நகர் முழுவதும் தேடியலைந்த பின்னர் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் பிள்ளைகளுடன் காலை முதல் அமர்ந்திருந்தார்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் அவரிடம் கலந்துரையாடினர். அருகில் இருந்த உணவகம் ஒன்றின் உரிமையாளர் குறித்த தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இலவசமாக இரண்டு நேர உணவினை வழங்கியதுடன், அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கும் தகவலை வழங்கினார்.

அவ்விடத்திற்கு விரைந்த ஊடகவியலாளர்கள் ஆகியோர் குறித்த பெண்ணிடம் அவரது கணவன் தொடர்பான தகவலை கேட்டறிந்ததுடன் அவரது குடும்ப நிலை பற்றிய தகவலை கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் பொலிஸாருக்கு ஊடகவியலாளர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய நடமாடும் பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கணவரை காணவில்லையேன மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் மட்டக்களப்புக்கு செல்வதற்கும் , சாப்பாட்டிற்கும் பணம் இன்றி தவித்த சமயத்தில் அவ்விடத்தில் நின்ற காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஜோன் , பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , ஊடகவியலாளர்கள் இணைந்து பணம் வழங்கி உதவி செய்தனர்.

பொலிஸார் பணம் வழங்கி உதவியமை அவ்விடத்தில் நின்றவர்களின் மனதை நெகிழ வைக்கும் செயற்பாடாக அமைந்திருந்தது.