வடக்கில் தாய், தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு புலமை பரிசில்! ஆளுநர் தகவல்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வடமாகாணத்தில் தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமை பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகளுடைய கல்வி மேம்பாட்டுக்காக புலமை பரிசில் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க ந டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு மாவட்ட மட்டத்தில் அந்த திட்டம் செயற்படுத்தப்படும்.

அதேபோல் விசேட தேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பேருந்து ஒன்றை யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கிடையில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடையோருக்கான வசதிகளுடன் கூடியதாகவும், பாடசாலை மாணவிகள் பாதுகாப்பாக பயணிக்க கூடியதாகவும் இந்த பேருந்து அமைந்திருக்கும்.

ஆசனங்கள் இல்லாமல், சக்கர நாற்காலியுடன் ஒருவர் அப்படியே பேருந்துக்குள் ஏறி பாதுகாப்பாக பயணிக்க கூடிய வகையில் பேருந்து அமைந்திருக்கும். இந்த பேருந்து சேவையும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Latest Offers