புதூர் பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - புதூர், புதுவிளாங்குளம் பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர்.

புதூர் சந்திக்கு அண்மையில் ஒன்று கூடிய பொதுமக்கள் ஏ9 வீதியில் இருந்து புதூர் செல்வதற்கான பிரதான வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது பிரதேசத்தின் மண் வளம் அனுராதபுரம் உள்ளிட்ட வேறு மாவட்டங்களிற்கு கொண்டு செல்லபடுகின்றது. எமது பகுதிகளில் வீடு கட்டுவதற்கு மணல் இல்லாமல் நாம் இருக்கிறோம்.

மண்ணை அள்ளிசெல்லும் வாகனங்களால் குறித்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. எனவே இந்த வீதியால் மணல் ஏற்றி செல்வதை தடுப்பதுடன், எமது பகுதியில் உள்ள வளத்தை நாமே பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் வளங்களை சுரண்டாதீர்கள், கனரக வாகனம் செல்லும் பாதை இல்லை இது, எமது வளத்தை எமக்கு தா போன்ற பதாதைகளை தாங்கியவாறு, கோசங்களை எழுப்பியிருந்ததுடன், மணல் ஏற்றுவதற்கு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றையும் தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.