தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ள கல்முனை தமிழ் மக்கள் மன்றம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கணக்காளர் நியமனம் எனும் விடயத்தை தனது கைக்குள் உள்வாங்கியுள்ளதாக கல்முனை தமிழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த மன்றத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ் அறிக்கையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகத் தரமுயர்வு எனும் கோரிக்கையானது மிக நீண்ட காலமாக நிறைவேற்றப்படாது இருந்து வருகின்றது.

இவ்விடயம் சம்மந்தமாக கல்முனை தமிழ் மக்கள் மன்றமானது பல காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது என்பதனை தெரிவிக்கும் அதேவேளை இவ் அமைப்பின் நடவடிக்கையானது அண்மையில் அதிதீவிர நிலையினை அடைந்து இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கணக்காளர் நியமனம் எனும் தொனிப்பொருளின் இவ்விடயத்தை தனது கைக்குள் உள்வாங்கியது என்பதனையும் இந்நிலையானது கல்முனை தமிழ் மக்கள் மன்றத்தை ஓர் பார்வையாளராகவும் மற்றும் கண்காணிப்பாளராகவும் இருக்கும் படியான நிலையை தோற்றுவித்தது என்பதனை மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

பின்னர் கணக்காளர் நியமனம் எனும் தொனிப்பொருளானது முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகத் தரமுயர்வு எனும் செயற்பாட்டிற்கு மாற்றம் அடைகின்றது.

இறுதியில் புதிய செயலக உருவாக்கம் எனும் அடிப்படையில் பல பிறழ்வுகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந் நடவடிக்கைகள் தொடர்பாக இடம்பெற்ற தெளிவூட்டும் ஒன்றுகூடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களால் 14.08.2019ஆம் திகதிக்குள் இவ் விடயம் நிறைவேற்றப்படும் எனும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட கல்முனை தமிழ் மக்கள் மன்றமானது இத்தினம் வரை தொடர்ந்து பார்வையாளராகவும், கண்காணிப்பாளராகவும் இருப்பது எனும் தீர்மானத்தை எடுத்தது என்பதை சகல மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

மேற்குறிப்பிட்ட கல்முனை வடக்கு பிரதேசச் செயலக தரமுயர்வு, பல பிறழ்வுகளை குறுகிய கால எல்லைக்குள் இதன் தற்போதைய ஏற்பாட்டாளர்களினால் எதிர்கொண்ட போதும் இன்னும் மக்கள் இவ் ஏற்பாட்டாளர்களின் செயற்பாட்டில் மிக்க நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

மேலும், பலர் பலவித விமர்சனங்களை அல்லது பல ஊடக அறிக்கைகளை இது தொடர்பில் வெளியிடலாம்.

ஆனால், இவற்றை எல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பீடமும் இவற்றின் அபிமானிகளும் கருத்தில் கொள்ளாது உரிய கால எல்லைக்குள் உகந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிற்கின்றது.

கல்முனை தமிழ் மக்கள் மன்றம் இவ் விடயமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபைக்கான கடந்தகாலத் தேர்தல்கள விஞ்ஞாபனத்தின் பிரதான அம்சமாகவும் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் வெற்றியின் பிரதான தொனிப்பொருளாகவும் அமைந்திருந்தது என்பதனை இவ்விடயத்தில் நினைவூட்டுதல் பொருத்தமானது.

எங்களை பற்றிய விமர்சனங்கள் என்பதனை புதியதொரு காரணமான கூறி இவ்விடயத்தை தோல்வியுறச்செய்தால் இதனோடு இணைந்த சகலரினரதும் விபரங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது தார்மீக கடமையாகும்.

இத்தார்மீக கடமையினை நிறைவேற்றும் பொறுப்பில் கல்முனை தமிழ் மக்கள் மன்றம் என்றும் பின்நிற்காது என்பதனையும் சகலருக்கும் அறிவிக்க விரும்புகின்றோம்.

எனவே, கல்முனை வடக்கு பிராந்திய ஏழு கிராம மக்களின் சார்பாக கல்முனை பிரஜைகள் அமைப்பினால் 01.07.2019 அன்று அம்பாறை அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட திட்ட வரைபின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை குறித்த கால எல்லையான 14.08.2019இற்கு முன்னர் பெற்றுத்தருமாறு கல்முனை தமிழ் மக்கள் மன்றம் கோரி நிற்கின்றது.