மன்னார், மடு திருத்தலத்தின் ஆணி மாத திருவிழா தொடர்பில் அவசர கலந்துரையாடல்

Report Print Ashik in சமூகம்

மன்னார், மடு திருத்தலத்தின் ஆணி மாத திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அவசர மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

மடு ஜோசப்வாஸ் கோட்போர் கூடத்தில் இன்று காலை மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்த நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி காலை 6.15மணிக்கு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள், குடிநீர், சுகாதாரம், மருத்துவம் உட்பட பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ், இராணுவம், கடற்படையினர் இணைந்து மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மடு பிரதேசச் செயலாளர் மற்றும் இராணுவம், பொலிஸ், கடற்படை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.