யுவதியை ஏமாற்றி கழுத்தை நெரித்து கொன்ற சகோதரர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

குருணாகல் யகல்ல பிரதேசத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு யுவதி ஒருவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

வெல்லவ மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான தம்மிக்க பிரசன்ன விஜேசிங்க, 50 வயதான அனுர ஜயதிஸ்ஸ விஜேசிங்க ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

14 வருடங்களுக்கு முன்னர், குருணாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தொழில் புரிந்து வந்த யுவதியை ஏமாற்றி விடுதிக்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த எரிபொருள் நிலையத்திற்கு சொந்தமான 9 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு, யுவதியை கொலை செய்ய திட்டம் தீட்டியமை, கொலை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக இந்த நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு குருணாகல் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 14 ஆண்டுகளாக குருணாகல் நீதவான் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்தது வந்த இந்த வழக்கை தொடர்ந்தும் மூன்று வாரங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஏதேனும் கூற இருக்கின்றதா என குற்றவாளிகளிடம் கேட்ட போது, தாம் நிரபராதிகள் என அவர்கள் நீதிமன்றத்தில் கூறினர்.

முறைப்பாட்டாளர் சார்பில் அரச சட்டத்தரணி சாரக தர்மசிறி ஆஜராகியதுடன் கொகரெல்ல பொலிஸார் சாட்சியங்களை நெறிப்படுத்த உதவினர்.