மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பம்

Report Print Rakesh in சமூகம்

மட்டக்களப்பு விமான நிலையத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரிய அம்சமாகும். இவ்விடயம் தொடர்பில் நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்தியப் பிரதமர், விமானத்துறை அமைச்சர் மற்றும் இந்திய அரசின் முக்கிய தலைவர்களுடன் தொடர்புகொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

அன்று இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் எமக்களித்த வாக்குறுதிகளுக்கு அமைய இதனைத் தற்போது செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரிய அம்சமாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்குத் தரமுயர்த்தபடும் அதேவேளை கிழக்கிலுள்ள விமான நிலையமும் அவ்வாறே தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நான் கிழக்கின் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்திய அரசின் கவனத்துக்கு முன்வைத்திருந்தேன்.

இது தொடர்பில் எனது தனிப்பட்ட விஜயங்களை இந்தியாவுக்கு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பேச்சுகளை நடத்தியிருந்தேன்.

எனது கோரிக்கைக்களுக்கு இந்தியத் தரப்பில் சாதகமான பதில்கள் வழங்கப்பட்டபோதும் பணிகள் தாமதம் கண்டன. இந்தநிலையில் எமது மாகாண சபையின் ஆட்சிக் காலமும் முடிவுற்ற நிலையில் இது குறித்த மேலதிக நடவடிக்கைகள் தேக்கம் அடைந்தன.

தற்போது பலாலி விமான நிலையப் பணிகள் முடிவுறும் நிலையில் மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்படவுள்ளமை மிகச் சிறந்த விடயமாகும்.

கடந்த பல தசாப்தங்களாக கிழக்குவாழ் மக்கள் இங்கிருந்து தமது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

அதுமட்டுமின்றி உள்நாட்டுக்கான விமான சேவைகளை பெறுவதும் அவர்களுக்கு முயற்கொம்பாகவே இருந்தது.

முப்பது வருடகால உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையிலும்கூட இந்தப் பயண வசதியை கிழக்குவாழ் மக்கள் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இவற்றைக் கவனத்தில் கொண்டே நான் இந்த விடயத்தில் இந்திய அரசியல் தரப்புகளோடு பல்வேறுகட்டப் பேச்சுகளை நடத்தியிருந்தேன்.

இதன் பெறுபேறாகவே இந்தப் பணிக்கான அவசியம் உணரப்பட்டதோடு, இதனைச் செய்ய வேண்டியதன் அவசியமும் இந்தியா அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் தற்போது இப்பணிகள் ஆரம்பமாகவுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

இதன்மூலம் கிழக்குவாழ் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை வாழ் மக்கள் பல்வேறு நற்பேறுகளைப் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகத்துறைகள் மேன்மை பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளமை சிறப்பானதே என்றுள்ளது.