கனடா வன்னி வழத்திற்கான புதிய சந்தர்ப்பங்கள் நிறுவனத்தினால் திறன் வகுப்பறை கையளிப்பு

Report Print Arivakam in சமூகம்

கிளி/பன்னங்கண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறைத் திறப்பு விழா கடந்த 2019.07.30 ஆம் திகதி மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை முதல்வர் லோகநாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கனடாவின் மொன்றியல் மாநகரிலுள்ள தமிழ் உறவுகளால் உருவாக்கப்பட்ட 'வன்னி வளத்துக்கான புதிய சந்தர்ப்பங்கள்' நிறுவனத்தினரின் நிதியுதவியோடு புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையை மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து சிறப்பித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'கனடா நாட்டினைத் தளமாக் கொண்டியங்கும் வன்னி வளத்துக்கான புதிய சந்தர்ப்பங்கள் என்ற அமைப்பினர் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதையே தமது இயங்குவிதியாகக் கொண்டு செயற்பட்டு வருவது மனநிறைவளிக்கிறது.

குறிப்பாக கடந்த வருட இறுதியில் வரலாறு காணாத வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரின் போது உடமைகளை இழந்து நிர்க்கதிக்குள்ளாகி நின்ற எமது மாவட்ட மக்களுக்கு உடனடியாகவே உதவிக்கரம் நீட்டி இருபத்தாறு இலட்சம் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான உலர் உணவுப் பொருட்களோடு, குடிநீர்க்கிணறுகள், மலசலகூடங்கள், வீடுகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும், வாழ்வாதார மேம்பாட்டு உதவிகளை வழங்கியும்,வன்னிப்பகுதியில் வாழ்கின்ற பொருளாதார இயலுமை குறைந்த குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக உதவி வருகின்ற அவர்களது சமூகப்பணியை இந்த இடத்திலே நன்றியோடு நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வன்னி வளத்துக்கான புதிய சந்தர்ப்பங்கள்' நிறுவனத்தினரின் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.