மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

Report Print Kumar in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டுதாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் சாந்த கொட்டேகொட விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 28 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இராணுவ பொறியியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இதன்போது பார்வையிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதலினால் சேதடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னேற்றகரமாக உள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தில் பாதுகாப்பு செயலாளருடன், இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர உட்பட இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலின் காரணமாக சீயோன் தேவாலயத்தில் மாத்திரம் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர் குறித்த தேவாலயத்தில் இராணுவத்தினரால் புனர் நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றைமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் - ருசாத்