பிளாஸ்டிக் பாவனையை தவிர்க்கவும்: வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

பிளாஸ்டிக் பாவனையை தவிர்க்குமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் இன்று கருத்து தெரிவிக்கும் போது,

எமது பிரதேசங்களில் தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் ஆரம்பித்துள்ளன. எனவே தூரதேசங்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் உள்ளூர் வாசிகள் என பலரும் ஆலயத்திற்கு சென்று வருகின்றனர்.

அவ்வாறு செல்பவர்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் பொருட்டு அர்ச்சனை கூடைகளை பெற்று அதனை கோவிலில் கொடுத்து அர்ச்சனை செய்வது வழமையான செயல்.

ஆனால் தற்போது தென்னிலங்கை மற்றும் பல பாகங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தந்து இந்த விழாக் காலங்களில் தங்கள் பொருட்களை விற்றுக் கொள்கின்றனர்.

இதனால் அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதனால் அவற்றின் பாவனைகள் அதிகரிக்கிறது.

எனவே ஆலயங்கள் உள்ளூர் உற்பத்தியினை மேம்படுத்த வேண்டும். பனை ஓலையால் பின்னப்பட்ட அர்ச்சனை கூடைகளை விற்பதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க செய்யலாம்.

அத்தோடு அதனை ஜீவனோபாயமாக செய்பவர்களும் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம். எனவே பிளாஸ்டிக்கை விட இவை விலை கூடினாலும் பரவாயில்லை.

இதனாலேயே எம்மவர் யாரோ தமது வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்வார்கள்.

எனவே வெளியில் இருந்து வியாபாரிகளையோ அல்லது பிளாஸ்டிக் பொருட்களையோ ஆலய சூழலுக்குள் அனுமதியாதீர்கள் என தெரிவித்துள்ளார்.