மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்: வைத்தியர் மதுபோதையில்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - நானாட்டான், அரிப்புத்துறை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் நானாட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

எனினும், குறித்த வைத்தியசாலையில் வைத்தியர் எவரும் கடமையில் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் மது போதையில் காணப்பட்டமையினால் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர். இதனால், வைத்தியசாலையில் சிறிது நேரம் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

பின்னர் நோயாளர் காவு வண்டி மூலம் படுகாயமடைந்த இருவரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்களை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் போது வைத்தியர் கடமையில் இல்லாமை குறித்து பொதுமக்கள் குறித்த வைத்தியரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு அவர், தனது கடமை நேரம் முடிந்து விட்டது அதான் இருக்கவில்ல என பதில் வழங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர சிகிச்சைகளுக்கு செல்கின்ற போது குறித்த வைத்தியர் தொடர்ச்சியாக, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டீபனை வினவிய போது,

நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற குறித்த வைத்தியர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

விடுமுறை நேரம் எனில் முறையாக எமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை.

கடமை நேரத்தில் போதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers