கிளிநொச்சி - மருதங்குளம் பகுதியில் அத்துமீறி இடம்பெற்ற தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - மருதங்குளம் பகுதியில் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர்கள் அங்கிருந்த மூவரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் 3.17 ஏக்கர் காணியும் அதன் கீழான ஒதுக்கீட்டுக் காணியும் உள்ளடங்கலாக 3.75 ஏக்கர் வயல் காணியில் அதன் உரிமையாளர் இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதனை அறுவடை செய்து கொண்டிருந்த வேளை, காணிக்குள் அத்துமீறி நுழைந்த கமக்கார அமைப்பின் தலைவர், அயல் கமக்கார அமைப்பின் பொருளாளர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோர் குறித்த காணி உரிமையாளரையும் அவரது மகனையும் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, காணி உரிமையாளரின் மகனை அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்த பின்னரே காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சிப் பொலிஸார் நேற்று காயமடைந்த மூவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த காணியில் அதன் உரிமையாளரை சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதிகளை கமக்கார அமைப்பு, பிரதேச செயலாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers