கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு பல மில்லியன்களை ஒதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் 1500 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

ஊரக எழுச்சி திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சிபாரிசுக்கு அமைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆலயங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகளை நேற்று மாலை நான்கு மணிக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆகிய நாங்கள் இதுவரை காலமும் உரிமை சார்ந்த அரசியலை மட்டுமே முன்னெடுத்து வந்தோம். ஆனாலும் தமிழ் மக்களினுடைய எதிர்பார்ப்பு அவர்களுடைய அன்றாட பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய கூட்டமைப்பினர் முன்வர வேண்டும் என்கின்ற வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் அபிவிருத்தியையும் அரசியல் உரிமையையும் ஒரு சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.

அந்த அடிப்படையிலேயே நாங்கள் தற்பொழுது இரண்டு விடயங்களையும் எங்களுடைய மக்களினுடைய நலனுக்காக முன்னெடுத்து வருகின்றோம்.

அத்தோடு ஒரு அரசியல் தீர்வை எட்டிப்பிடிக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். ஏனென்றால் அரசியல் தீர்வு அற்ற அபிவிருத்தி என்பது எங்களுக்கு ஒரு மாயை அது எந்த வினாடியும் அந்த அபிவிருத்தியை இல்லாமல் செய்து விடலாம்.

ஆனால் எங்களுக்கு என்று ஆட்சி அதிகாரம் நிலையாக இருக்குமாயின் நாங்கள் எங்களை கட்டியெழுப்ப முடியும். என்பதை நீங்கள் அனைவரும் மனதில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் உப தலைவரும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சரும் ஆகிய குருகுலராஜா மற்றும் பச்சிலைபள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் கஜன், உறுப்பினர்களான ரமேஷ் வீரவாகுதேவர் அருட்செல்வி கோகுல்ராஜ் போன்றோரும் கலந்து கொண்டனர்.

Latest Offers