கண்காட்சி பொருளாக மாறும் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான வீடு: ஊடகவியலாளர்களிடம் மிரட்டல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி அம்பாறை மாவட்டம் - சாய்ந்தமருது, வொலிவியன் கிராமத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்குள்ளான வீட்டை பார்வையிடுவதற்கு இராணுவத் தளபதி உட்பட அவரது உறவினர்கள் அங்கு வருகை தந்திருந்தனர்.

இதனால், பாண்டிருப்பு முதல் சாய்ந்தமருது வரையான பகுதியில் நேற்று மாலை இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், மக்களிடம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையினை படம் பிடித்த ஊடகவியலாளர்கள் இதன்போது மிரட்டப்பட்டுள்ளதுடன், படங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்குள்ளான வீட்டை பார்வையிடுவதற்காக இராணுவ தளபதியின் குடும்பம் வருவதை ஊடகவியலாளர்கள் அறிந்தமை காரணமாக அவர்களிடம் கடுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனால் அச்சமடைந்த 6 ஊடகவியலாளர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வீட்டிற்கு அருகில் கடமையில் இருந்த இராணுவத்தினரால் ஊடகவியலாளர்களின் வருகை தொடர்பில் மேலிடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இராணுவத் தளபதி உட்பட அவரது உறவினர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.

இதன்போது, நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் வீட்டை சுற்றி கடும் பாதுகாப்பில் இருந்துள்ளதோடு, இராணுவ மோட்டார் சைக்கிள் படையணியும் களத்தில் நின்று பொதுமக்களை மிரட்டியதை காண முடிந்ததாக தெரியவந்துள்ளது.

எனினும், இரவு 8 மணியளவில் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்த வீட்டினை குறித்த இராணுவ தளபதியின் குடும்பத்தினர் பார்வையிட்டு சென்றுள்ளதை இராணுவத்தின் சில தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் இராணுவ பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கூட்டிச்சென்று காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டை இராணுவத்தினர் சென்று பார்ப்பது தொடர்பாக அருகில் உள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், இவ்வாறு குறித்த வீட்டை பார்ப்பதற்கான நோக்கம் அதை புனரமைத்து கொடுப்பதற்காக உதவிகளை பெற நடவடிக்கை எடுப்பதற்கு என தெரவிக்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வதனால் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு உட்பட பல பிரதேசங்களில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இஸ்லாமிய மக்களின் பெருநாளை முன்னிட்டு நகரத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடுத்து இராணுவப் புரட்சி ஏற்படுமோ என்ற ஐயப்பாடும் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு தற்கொலை தாக்குதலுக்கு உள்ளான சியோன் தேவாலயத்தை இராணுவ தளபதி உட்பட பாதுகாப்புச் செயலாளர் திடீரென விஜயம் செய்து பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers