மன்னார் கால்பந்தாட்ட வீரர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்: பாதிக்கப்பட்ட வீரர்கள் வேண்டுகோள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் கீழ் பதிவு செய்யப்பட்ட 19 வீரர்கள், கடந்த வாரம் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் வடக்கு கிழக்கு பிரீமியர் லீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட காரணத்தினால் மன்னார் உதைப்பந்தாட்ட லீக்கினால் ஒரு வருட தடை மற்றும் 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒரு வருட தடை விதிக்கப்பட்ட வீரர்கள் இன்றைய தினம் மன்னாரில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த ஊடகச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட வீரர்கள் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள்,

நேற்று முதல் குறித்த தடையானது செல்லுபடியற்றது எனவும் எந்த வீரர்களும் குறித்த சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ள முடியும் எனவும் தேசிய உதைபந்தாட்ட லீக்கினால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற இருக்கின்ற உள்ளூர் போட்டிகளில் குறித்த 19 வீரர்களும் விளையாடுவதற்கு மன்னார் லீக்கினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பிரீமியர் லீக் சுற்றுப்போட்டியில் மன்னார் மாவட்ட வீரர்கள் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட போதும் மன்னார் உதைதிபந்தாட்ட லீக்கினால் மன்னார் வீரர்கள் மன்னார் எப்.சி அணிக்கு மத்திரமே விளையாட வேண்டும் எனவும் வேறு அணிகளுக்கு விளையாடினால் தடை விதிக்கப்படும் எனவும் பணிக்கப்பட்டதால் அனைத்து மன்னார் வீரர்களும் எந்த ஒரு எதிர்பார்ப்புக்கள் மற்றும் சலுகை இல்லாமல் மன்னார் எப.சி அணிக்காக விளையாடினோம்.

கடந்த வருட சுற்றுப் போட்டியில் அரை இறுதி வரை நுழைந்த போதும் எங்களை ஒழுங்கான விதத்தில் தயார்படுத்தவோ பாராட்டவோ இல்லை.

எங்களுக்கு என ஒரு மருத்துவ கொடுப்பனவோ, ஏன் அறையிறுதி போட்டியில் தோற்ற சமயத்தில் இரவு உணவு கூட வாங்கித்தராமல் மன்னார் எப்.சி நிர்வாகத்தினர் 5000 ரூபாய் பணம் மாத்திரம் தந்தார்கள்.

ஆனால், அது ஒரு பெரிய விடயமாக எங்களுக்கு தெரியவில்லை. மன்னார் மாவட்ட அணி என்பதற்காகவும் எமது திறமைகளை வளர்ப்பதற்காகவுமே விளையாடினோம்.

அதே போன்று இவ் வருடமும் மன்னார் வீரர்கள் அதிகளவான விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட போதும் அதிகளவான வீரர்கள் மன்னார் அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக ஊக்கம் எடுத்து செயற்பட்டதால் மன்னார் எப்.சிக்காக பதிவு செய்தோம்.

ஆனாலும், இவ்வருடம் மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் என்.இ.பி.எல் விளையாடினால் ஒரு வருட தடையும் 20,000 ரூபாய் தண்டமும் விதிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அச்சத்தினால் பல வீரர்கள் தங்கள் திறமைகளை மறைத்து போட்டியில் பங்கு பெறவில்லை.

ஆனாலும், உதைப்பந்தாட சம்மேளனத்தினால் குறித்த போட்டியில் வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த எல்லா வீரர்களும் பங்கு பெற்ற முடியும் என தெரிவிக்கப்பட்ட போதும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து லீக்குகளும் அவர்கள் கழகங்களைச் சேர்ந்த வீரர்களை குறித்த சுற்று போட்டிகளில் விளையாட அனுமதித்த போதும், மன்னார் உதைபந்தாட்ட லீக் மாத்திரம் தனிப்பட்ட காரணங்களுக்காக மன்னார் வீரர்கள் மீது தடை விதித்தது.

ஆனாலும், நாங்கள் ஒரு சில வீரர்கள் உரையாடி மன்னார் மாவட்டத்திற்காகவும் எமது திறமைகளை வளர்ப்பதற்காகவும் இவர்களின் தடையையும் மீறி விளையாடினோம்.

இப்போது 19 வீரர்களுக்கு தடை விதித்திருக்கின்றார்கள். மன்னார் அணிக்காக விளையாடியதற்காக தடை விதித்திருக்கின்றார்கள்.

லீக் ஒழுங்காக செயற்பட்டிருந்தால் மன்னாரில் உள்ள அனைத்து நல்ல வீரர்களையும் ஒன்று சேர்த்து இச்சுற்று போட்டியை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடிந்திருக்கும்.

மன்னார் லீக்கிற்கு பணத்தை திருப்பி பெற்றுகொள்வதே நோக்கமாக இருக்கின்றதே தவிர, மன்னார் வீரர்களை முன்னேற்றுவிப்பதோ அவர்களை விளையாட்டில் வளர்ப்பதோ நோக்கம் இல்லை.

அதே நேரத்தில் தேசிய அணியில் இடம்பிடித்த ஒரு வீரருக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதன் மூலம் எமது திறமை வளரப் போவதில்லை.

இவ்வாறான மாகாண தேசியச் சுற்று போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலமே எங்களால் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.

எனவே, மன்னார் லீக் தனிப்பட்ட காரணங்களுக்காக வீரர்களின் திறமையில் விளையாடாமல் குறித்த தடையை நீக்கி மன்னார் கால்பந்தாட்ட வீரர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட வீரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers