கிளிநொச்சியில் அதிக குருதி வழங்குனர்களாக செயற்படும் இராணுவத்தினர்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி பிராந்திய இரத்த வங்கிக்கு இராணுவத்தினரே அதிக குருதி வழங்குனர்களாக உள்ளனர் என இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

இன்று எமது ஊடகவியலாளர் இரத்த வங்கியினரை தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள்,

மாதாந்தம் 150 பொயின்ஸ் குருதி தேவையாக உள்ளது. ஆனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சுமார் 100 பொயின்ஸ் வரையான குருதிகளே கிடைக்கப்பெறுகின்றன.

பொதுமக்கள் நாள்தோறும் காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஐந்து மணிவரை கிளிநொச்சி இரத்த வங்கிக்கு வருகை தந்து குருதி வழங்க முடியும்.

மேலும், கிளிநொச்சி மாவட்டம் போசாக்கு மட்டத்தில் மிகவும் கீழ் நிலையில் இருப்பதனால் கர்ப்பிணிப் பெண்கள், பிறக்கும் குழந்தைகள், அறுவை சிகிச்சை மேற்கொள்வோர் ஆகியோருக்கும் மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள டெங்கு நோயாளர்கள், விபத்துகளில் காயமடைவோர் போன்றோருக்கும் குருதித் தேவை அதிகமாக இருக்கிறது.

தமது இரத்த வங்கிக்கு இராணுவத்தினரும், யாழ் பல்கலைகழக மாணவர்களுமே பிரதானமான இரத்தம் வழங்குனர்களாக உள்ளனர்.

அத்தோடு கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர் மாதாந்தம் சுமார் 20 பொயின்ஸ் குருதியை வழங்கி வருகின்றனர் எனவும் கிளிநொச்சி இரத்த வங்கி வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அந்த வகையில் 10.08.2019 கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினர் 20 பொயின்ஸ் குருதியை வழங்கியுள்ளனர்.

இம்மாதம் 15ஆம் திகதி யாழ் பல்கலைகழக மாணவர்கள் 150 பொயின்ஸ் இரத்தமும், 24ஆம் திகதி துணுக்காய் இராணுவத்திடம் 80 பொயின்ஸ் இரத்தமும், வரும் மாதம் 14ஆம் திகதி பரந்தன் இராணுத்தினர் 80 பொயின்ஸ் இரத்தமும், 25ஆம் திகதி கிளிநொச்சி இராணுவத்தினர் 70 பொயின்ஸ் இரத்தமும் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இராணுவத்தினரிடமிருந்து குருதியை இவ்வாறு நாளாந்த தேவைகளுக்காகப் பெறுவது கடந்த காலங்களில் தவிர்க்கப்பட்டிருந்தாகவும், பேரிடர் அவசரகால நிலைமைகளில் மிகப் பெரியளவில் குருதித்தேவை ஏற்படும்போது, குருதியை பெற்றுக் கொள்வதற்கான அவசரகால சேமிப்பாக படையினரே செயற்படுவர் என்பதே இதற்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களிடம் மாதாந்தம் இவ்வாறு குருதி பெறுவது அவசர கால நிலைமைகளில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், இரத்த வங்கிக்கு பொறுப்பானவர்கள் சமூகத்திற்குள் இறங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்த அதிக குருதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

2009இற்கு முன் யுத்தக் காலத்தில் அதிக குருதி தேவையான போது இங்குள்ள மக்களே வன்னி முழுமைக்குமான குருதிக்கொடையினைத் தன்னார்வத்துடன் மேற்கொண்டு பல்லாயிரக் கணக்கானவர்களது உயிர்களைக் காப்பாற்றியிருந்தனர்.

தற்போது அந்த நிலைமை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை கிளிநொச்சிப் பிராந்திய இரத்த வங்கியுடன் இணைந்து சமூக மட்ட அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers