தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் முன்னெடுக்கப்படும் கட்டுமானப்பணியை நிறுத்தக் கோரிக்கை

Report Print Suman Suman in சமூகம்

முல்லைத்தீவு - விஸ்வமடு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார்

இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விஸ்வமடு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் அண்மைக் காலமாக இராணுவத்தினரால் நிரந்தர கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இது ஓர் சுமூகமான சூழ்நிலைக்கு எதிரானதொன்றாக நான் கருதுகின்றேன்.

இதனை உடனடியாக நிறுத்தி நிலைமைகளை சீர் செய்ய வேண்டும். யுத்தத்தில் இறந்த வீரர்களை ஒவ்வொரு வருடமும் அமைதியான முறையில் நினைவுக்கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதனை அனைவரும் அறிந்த விடயம்.

இனவாதிகளை பொறுத்தவரை அவர்கள் புலிப் பயங்கரவாதிகள்? ஆனால், அவர்கள் அனைவரும் எமது உறவுகள். எங்களின் பிள்ளைகள் அவர்களின் இழப்பு எங்களுக்கு ஈடு செய்யப்பட முடியாத ஒன்று அவர்களை வருடத்தில் ஒருநாள் நினைவு கூர்ந்து வருகின்றோம்.

எமது பிள்ளைகள் விதைக்கப்பட்ட புனித பூமியில் இராணுவத்தினர் நிரந்தர கட்டிடங்களை அமைப்பது மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயலாகவே நான் பார்கின்றேன்.

முதலில் இவ்வாறான கடும்போக்கு வேலைகளை நிறுத்தி மக்களின் மனங்களை வெல்லப் பாருங்கள். அதனை விடுத்து தொடர்ந்தும் இவ்வாறான செயல்களை முன்னெடுத்து நீங்களே மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளிகளை அதிகரித்து செல்கிறீர்கள்.

துயிலுமில்லம் என்பது எங்களுக்கு கோவில். நாங்கள் பூஜைக்காகவே செல்கின்றோம்.

கடந்தக் காலத்தில் கல்லறைகளை கனரக வாகனங்கள் கொண்டு உடைத்தீர்கள் அவற்றை தாங்கிக் கொண்டோம். வழிபாட்டு இடம்போன்று கண்காணித்து வரும் இப் பூமியில் நிரந்தரக் கட்டிடம் அமைப்பதனை உடனே நிறுத்த வேண்டும்.

இல்லை எனில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். இவை தொடர்பில் தற்போதைய நிலைமைகளை தெளிவுப்படுத்தி நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிப்பு ஒன்றை செய்ய உள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers