சாய்ந்தமருது தாக்குதல் இடம்பெற்ற வீட்டை பார்வையிட வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் அச்சத்தில்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி அம்பாறை - சாய்ந்தமருது, வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற பொலிஸாருக்கும் தற்கொலை குண்டுதாரிகளுக்கு இடையிலான தாக்குதலினால் சேதமடைந்த வீட்டை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று காலை வருகை தந்திருந்தனர்.

புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் தாக்குதலுக்குள்ளான வீடு காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வீட்டை பார்வையிடுவதற்காக அம்பாறை தடயவியல் பொலிஸார், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சகிதம் வெள்ளை நிற வாகனம் ஒன்றில் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்.

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பயிற்சி தளங்கள், தாக்குதலுக்குள்ளான சில இடங்களை பார்வையிட்ட பின்னர் சாய்ந்தமருதில் உள்ள குறித்த வீட்டை இறுதியாக பார்வையிட இவர்கள் வந்துள்ளனர்.

இதனை அறிந்த ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் எடுக்க சென்றுள்ள வேளை வாகனத்தில் வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் குறித்த வீட்டிற்கு அருகே இருந்த ஊடகவியலாளர்களை கண்டு திரும்பி சென்றுள்ளனர்.

அண்மைக்காலமாக இத்தாக்குதலுக்குள்ளான வீட்டை இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட தரபபினர் அடிக்கடி சென்று பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும், தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்த வீட்டினை பார்வையிடாமல் சென்றவர்கள் எந்த நாட்டு பிரதிநிதிகள் என தெரியவில்லை எனவும் எதற்காக பார்வையிடாமல் திரும்பி சென்றனர் என்பது வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் இராணுவ பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கூட்டிச்சென்று காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டை இவ்வாறு இராணுவத்தினர் சென்று பார்ப்பது தொடர்பாக அருகில் உள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருவதுடன், சில இராணுவத்தினர் இவ்வாறு குறித்த வீட்டை பார்ப்பதன் நோக்கம் அதை புனரமைத்து கொடுப்பதற்காக உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படுதற்கு என்று கூறிச் சென்றுள்ளனர்.

Latest Offers