மட்டக்களப்பில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறப்பு! நஷ்டஈடு கோரியும் பயன் இல்லை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதி தொடக்கம் இன்றுவரையில் 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ள நிலையில் இதுவரையில் எந்தவித நஸ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் கூட்டம் இன்று காலை மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.

பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவரும் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் நிதி தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக பண்ணையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றபோதிலும் அவற்றிற்கு எதுவித தீர்வும் காணப்படுவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிவரும் தொடர்ச்சியான வறட்சி காரணமாக கால்நடை பண்ணையாளர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை பிரச்சினை காரணமாக பண்ணையாளர்கள் எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு இறுதி பகுதியில் இருந்து இன்றுவரையில் 14ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது இதுவரையில் ஏன் நஸ்ட ஈடுகள் வழங்கப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வியெழுப்பியதுடன் முறையான நஸ்ட ஈட்டு திட்டங்கள் இல்லாத காரணத்தினால் வழங்கப்படவில்லையென்ற பதிலும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தில் 45 களப்பணியாளர்கள் தேவையான நிலையில் வெறும் 06பேர் மட்டுமே பணியாற்றுவதன் காரணமாக முழுமையான சேவையினை வழங்கமுடியவில்லையெனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.