செஞ்சோலை படுகொலையின் நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

கடந்த 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று முல்லைத்தீவில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பொது திருவுருவப்படத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பொதுச் சுடர் ஏற்றி வைத்ததுடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான சுடர்கள் அவர்களுடைய உறவுகளால் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த மாணவர்களுடைய ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவு தூபி திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ(10 நாட்கள்) பயிற்சி நெறிக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் கல்விவலய பாடசாலைகளில் இருந்து 400 மாணவிகள் 2006 ஒகஸ்ட் 11ஆம் திகதி செஞ்சோலை வளாகத்திற்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையினர் நடத்திய விமான தாக்குதலினால் 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 150இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.