கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் குமாரி ரத்னாயக்க முன் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹலாவத ஆராய்ச்சி கட்டுவ விஜய கட்டுவ பகுதியைச் சேர்ந்த விஜயசிங்க முதியன்சலாகே நிமால் ஸ்ரீ (வயது 56) மற்றும் கிருலப்பனை, கூம்பிகெலே பகுதியை சேர்ந்த வீரப்பன் சிவா (43 வயது) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட நபரும், சந்தேகநபர்களும் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர். இதன்போது மூவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் சந்தேகநபர்கள் தவிர்ந்த மற்றைய நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலினால் தலையில் ஏற்பட்ட காயத்தால் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers