வவுனியா சென்ற பிரதமர் ரணிலிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மக்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவிற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இவர்களின் போராட்டம் காரணமாக பிரதமர் தான் செல்ல வேண்டிய வீதியை விட்டு மாற்றுவீதியை பயன்படுத்திச் சென்றுள்ளார்.

தமது போராட்ட களத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நீதிமன்ற வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை சென்றடைந்ததும் விஷேட அதிரடிப்படையினர், பொலிசார், கலகம் தடுப்பு பொலிசார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் பேருந்தை குறுக்கேவிட்டு வீதியையும் தடை செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்.பி வெலிகள போராட்டம் மேற்கொண்ட உறவுகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

சற்று நேரத்தின் பின்னர் காணாமல் போன உறவுகளின் போராட்ட களத்திற்கு பிரதமரை அழைத்து வருவதாக பொலிசார் வாக்குறுதி வழங்கியதையடுத்து காணாமல்போன உறவுகள் தமது போராட்ட களத்திற்குத் திரும்பியுள்ளனர்.

கூட்டமைப்பினரே வெளியேறு, எங்கே எங்கே எமது பிள்ளைகள் எங்கே என்ற கோசத்துடன் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று மாலை 3.00மணியளவில் வன்னி விமானப்படைத்தளத்திற்கு சொப்பர் விமானத்தில் அமைச்சர்களின் சகிதம் வந்திறங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக போராட்ட களத்திற்குச் செல்லும் பிரதான கண்டி வீதி வழியாகச் தனது பயணத்தை மேற்கொள்ளாமல் வவுனியா மணிக்கூட்டுக்கோபுரம் ஊடாக பஜார் வீதி வழியாக இலுப்பையடி சென்று வைத்தியசாலையினை சென்றடைந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாகவே பிரதமர் பிரதான வீதியைப் பயன்படுத்தாமல் பல வீதிகளை சுற்றி நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.