கிளிநொச்சியில் காணி உரிமையாளர் ஒருவரை தாக்கிய சந்தேக நபர்கள் ஆறு பேர் பிணையில் விடுதலை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி முரசு மோட்டை, மருதங்குளம் பகுதியில் வயல் காணிக்குள் அத்துமீறி நுழைந்து காணி உரிமையாளர் உட்பட நான்கு பேரையும் தாக்கிய சந்தேக நபர்களில் அப்பகுதி கமக்கார அமைப்பின் தலைவர் உட்பட ஆறு பேரையும் தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட மருதங்குளம் பகுதியில் 3.17 ஏக்கர் காணியும் அதன் கீழான ஒதுக்கீட்டுக்காணி உள்ளடங்கலாக 3.75 ஏக்கர் வயல் காணியில் அதன் உரிமையாளர் இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொண்டதுடன், கடந்த வெள்ளிக்கிழமை அதனை அறுவடை செய்து கொண்டிருந்த சமயம் காணிக்குள் அத்துமீறி நுழைந்த கமக்கார அமைப்பின் தலைவர் அயல் கமக்கார அமைப்பின் பொருளாளர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் குறித்த காணி உரிமையாளரையும் அவரது மகன் மற்றும் உறவினர்களை கடுமையாத்தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வதற்காக சம்பவ இடத்திற்கு வந்த அவசர நோயாளர் காவு வண்டியில் மயக்கமுற்றநிலையில் இருந்த அவரது மகனை ஏற்றிச்செல்லவிடாது தடுத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்த பின்னரே காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளநொச்சிப் பொலிசார் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட கமக்கார அமைப்பின் தலைவர் உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் அவர்களின் முன்னிலையில் ஆஜர் படுத்தியதையடுத்து குறித்த அப்பகுதி கமக்கார அமைப்பின் தலைவர் உட்பட ஆறு பேரையும் தலா ஒருலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்துள்ளதுடன் எதிர்வரும் 19ஆம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இதேவேளை இச்சம்பவத்துடன் தெடர்புபட்ட ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.