கண்காட்சி பொருளாகும் தற்கொலை தாக்குதலுக்கு இலக்கான சாய்ந்தமருது வீடு

Report Print Gokulan Gokulan in சமூகம்

தற்கொலை தாக்குதலுக்கு இலக்கான அம்பாறை, சாய்ந்தமருது வொலிவியன் கிராமத்தில் உள்ள வீட்டினை அன்றாடம் பொதுமக்கள் பார்வையிட்டுச் செல்வதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக வெளிமாவட்ட மக்கள் உள்ளூர் மக்கள் குறித்த வீட்டினை சென்று பார்வையிட்டு புகைப்படங்களும் எடுத்து சென்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாண்டிருப்பு முதல் சாய்ந்தமருது வரை அதிகளவான இராணுவத்தினர் பாதுகாப்பு சோதனைக்காக குவிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவ உயரதிகாரிகளின் சில குடும்ப உறுப்பினர்களும் குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த வீட்டினை பார்வையிட முயற்சி செய்துள்ளனர்.

மேலும் குறித்த தாக்குதலுக்குள்ளான வீட்டை பார்வையிடுவதற்காக வரும் பொதுமக்கள் அருகில் உள்ளவர்களிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்து செல்வதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக காரைதீவு, மருதமுனை, கொழும்பு, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இவ்வாறு சேதமடைந்த வீட்டை சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேலும் அண்மைக்காலமாக குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிலர் கூட்டிச்சென்று காட்டுவதாகவும் அதற்காக பணம் அறவிடப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

குறித்த வீட்டை இவ்வாறு சென்று பார்ப்பது தொடர்பாக அருகில் உள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருவதுடன் சிலர் இவ்வாறு குறித்த வீட்டை பார்ப்பதன் நோக்கம் அதை புனரமைத்து கொடுப்பதற்காக உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி சென்றுள்ளனர்.