வவுனியாவில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டத்தினையும் அதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் புலனாய்வாளர் ஒருவர் துரத்தி துரத்தி புகைப்படம் எடுத்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தூர நோக்கி புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி புகைப்படம் பிடித்த சிவில் உடை தரித்த புலனாய்வாளருடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இணைப்பாளர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவரது அடையாளத்தையும் உறுதிப்படுத்துமாறும்
போராட்டத்தைப் புகைப்படம் பிடிப்பவர்கள் யார் என்று உறுதிப்படுத்துமாறும் கோரியுள்ளார்.
எனினும், அவர்களிடமிருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை என்பதுடன் அங்கிருந்து அவர் திரும்பிச் சென்றுள்ளார்.
இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் அவர்களின் கைகளில் தாங்கியிருந்த பதாதைகளையும் அவர் சுற்றி சுற்றி புகைப்படம் பிடித்துள்ளார்.
இந்நடவடிக்கை காணாமல் போனவர்களின் உறவுகளை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.