வடக்கு கிழக்கு தழுவிய பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிப்பதோடு ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளனர்.
எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் போனோர் நாளினை முன்னிட்டு வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 890வது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அன்று வடக்கில் உறவுகளை கையளித்த இடமான ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும், மாபெரும் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளோம்.
அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக முன்வந்துள்ள கோத்தபாய ராஜபக்ச எங்களுக்கு குற்றமிழைத்தவர்.
அவரிடம் தான் எங்கள் உறவுகளை நாங்கள் கையளித்தோம். முல்லைத்தீவில் வட்டுவாகல், செல்வபுரம், ஓமந்தையில் பல முகாம்களில் கையளித்தோம்.
அவரும் சேர்ந்துதான் எங்கள் உறவுகளை கடத்தினார்கள், அவரால்தான் அரசியல் கைதிகளாக இருக்கின்றார்கள். அவர் தன்னுடைய குற்றத்தினை மறைப்பதற்காக மீண்டும் நாடக மேடை ஏறுகின்றார்கள்.
எங்களுக்கு அரசியலில் நம்பிக்கை இல்லை. அவர் வந்தாலும் என்ன பதில் தருவார் என்றும் எங்களுக்கு தெரியும். எங்கள் உறவுகளை விடுதலை செய்து அவர் ஜனாதிபதியாக வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் உறவுகளை இப்போதும் மறைத்துவைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழினத்தை அழிப்பதற்காக பாரிய சதி ஒன்றினை மேற்கொள்ளவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை தமிழ் மக்கள் எல்லோரும் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி தெரிவித்துள்ளார்.