வவுனியா - சாந்தசோலை சந்திக்கு அருகில் வைத்து, முதிரை மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனமொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி முதிரை மரங்களுடன் சென்று கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
சம்பவத்தின் பின்னர் கப் ரக வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாருமற்ற நிலையில் அநாதரவாக கப் ரக வாகனம் நின்றமையால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குறித்த மரங்கள் அனுமதி இன்றி கடத்தபட்டுள்ளதாகவும், தப்பி சென்ற சாரதியை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.