மட்டக்களப்பில் ஏன் இந்த அவலம்! ஆபத்து யாருக்கு?

Report Print Sujitha Sri in சமூகம்

இயற்கை வளம் மிக்க மட்டக்களப்பு மாவட்டம் வரலாறு காணாத வறட்சியை இம்முறை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

இலங்கையின் மிகப்பெரும் நீர்பாசனக்குளங்களில் ஒன்றாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர் வழங்கல் குளமுமான உன்னிச்சைக்குளம் கூட எப்போதும் இல்லாதது போல இம்முறை வற்றியுள்ளது.

உன்னிச்சைக்குளம் இயற்கையாக அமைந்த குளமாக காணப்படுகின்ற போதிலும் 1907ஆம் ஆண்டு குளமாக கட்டப்பட்டது. பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தததை தொடர்ந்து புனரமைக்கப்பட்டது.

33 அடி நீர்கொள்ளவு கொண்ட உன்னிச்சை குளத்தில் தற்போது நான்கு அடி நீரே காணப்படுகின்றது. உன்னிச்சைக்குளத்தின் நடுப்பகுதியில் மட்டுமே நீர்தேங்கி நிற்கும் நிலையினையும் காணமுடிகின்றது.

தற்போது உன்னிச்சைக்குளத்தில் இருந்து குடிநீருக்காக மட்டுமே நீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே நீர் விநியோகம் செய்ய முடியும் எனவும் மழை பெய்யாவிட்டால் முற்றாக நீர் விநியோகத்தினை நிறுத்த வேண்டிவரும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசனத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம்.அஷார் தெரிவித்துள்ளார்.

முகத்துவாரம் வெட்டும் போது ஏற்படும் சிக்கல்களாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். முகத்துவாரம் வெட்டும் போது நிதானம் வேண்டும். ஆனால் இம்முறை முகத்துவாரமானது மட்டக்களப்பிலுள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளரொருவரின் நலனுக்காகவே வெட்டப்பட்டுள்ளது.

மழை பெய்து நீர் தேங்கி நின்றால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்ட பின்னரே முகத்துவாரம் வெட்டப்பட வேண்டும். அந்த வகையில் இம்முறை மழை பெய்தது, அதனால் வெள்ளமும் ஏற்பட்டது.

என்ற போதிலும் வெள்ள நீரை ஒரு கிழமை கூட நீடிக்க விடாமல் உடனடியாக முகத்துவாரம் வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையே வரலற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பில் மக்கள் நீருக்காக ஏங்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளமைக்கு காரணமாகும்.

மட்டக்களப்பிலுள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வாழ்வாதாரத்தை பார்த்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் இதனால் பாதிக்கப்பட போகும் மக்கள் குறித்து சிறிதளவேனும் சிந்திக்கவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பில் மற்றுமொரு புறம் தலை தூக்கியுள்ள பிரச்சினையாக வைத்தியசாலை கழிவுகளை முறையற்ற விதத்தில், சுகாதாரமற்ற வகையில் புதைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காணப்படுகிறது.

உண்மையில் வைத்தியசாலையின் கழிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். என்ற போதிலும் மட்டக்களப்பு வைத்தியசாலை இந்த கழிவுகள் தொடர்பில் அசமந்தமாக செயற்படுவது அடிமட்ட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் 70 மெட்ரிக் டொன்னுக்கும் மேற்பட்ட கழிவுகளை தவறான முறையில் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேப்பவட்டவான் பகுதியில் கொட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

அவர்கள் கழிவுகளை கொட்ட முயற்சித்த பகுதிக்கு அருகில் மீன்பிடி குளமொன்று உள்ளது. அதில் தான் பூவல் வைத்து மக்கள் நீர் பெற்று வருகின்றனர். சுகாதார திணைக்களத்தின் சட்ட திட்டங்களை மீறி, முறைகேடான வகையில் அனுமதி பெற்று இந்கு கழிவுகளை புதைக்க முற்பட்டமை பிழையாகும்.

அத்துடன் இது தொடர்பில் கேள்வி கேட்கும் மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும், அவர்கள் தூண்டிவிடப்படுவதாக கூறுவதும் பாரிய பிழையாகும்.

இப்படியான சுகாதாரத்திற்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடிய கழிவுகளை புதைப்பதற்கு வெம்பு நிலங்கள் மற்றும் நீண்ட காலங்களுக்கு மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலப்பகுதிகள் காணப்படுகின்றன.

மேட்டு நில பகுதிகளை விட்டு விட்டு நீர் தேங்கக்கூடிய தாழ் நிலப்பகுதிகளை தெரிவு செய்துள்ளமையானது யாரை திட்டமிட்டு பழிவாங்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என சமூக அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் நீர் தேங்கும் இடத்தில் இப்படியொரு வேலையை செய்தவர்கள் இது தொடர்பில் சிந்திக்காமல் செய்துள்ளார்களா அல்லது தெரிந்தே தமது சுய லாபத்திற்காக இப்படியொரு வேலையை நடத்தியுள்ளார்களா என்பது சந்தேகமே.

எனினும் இந்த விடயம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் சரியான முடிவினை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்தியாவில் நைட்ரோ காபனுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கியது போன்ற நிலை மட்டக்களப்பிலும் உருவாகும்.

போர் மௌனிக்கப்பட்ட பின் தொடர்ச்சியாக பல இயற்கை வேதனைகளை வடக்கு கிழக்கு அனுபவித்து வருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இயற்கை வளங்களை அழித்து அங்கு மக்களை நிர்க்கதிக்கு உள்ளாக்குபவர்கள் விரைவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Latest Offers