ஹட்டன் - லெதண்டி தோட்டம், மார்பரோ பகுதியில் நேற்று காலை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
ஹட்டனிலிருந்து எபோட்சிலி வரையிலான பிரதான வீதியை புனரமைத்து தருமாறுக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகின்றது.
குறித்த வீதி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக உள்ள நிலையில், இது தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், அன்றாட போக்குவரத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் அவதியுறும் நிலையை கவனத்திற் கொண்டு, இவ்வீதியை காலம் தாழ்த்தாது புனரமைத்து தரும்படி அரசாங்கத்தையும், நுவரெலியா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.