ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
62Shares

இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒரு தொகுதியினர் மூன்று கட்டங்களாக வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் மீண்டும் சுய விருப்பின் பேரில் நீர்கொழும்பு திரும்பிச் சென்றுள்ள நிலையில் ஒரு பகுதியினர் புனர்வாழ்வு நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களை பார்வையிட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அவர்களது தற்போதைய நிலை, தீவிரவாத தாக்குதலின் பின்னரான நிலமைகள் மற்றும் அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினார். குறித்த சந்திப்பானது சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

முன்னதாக வவுனியா, குருமன்காடு கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் வவுனியா மாவட்ட மத நல்லிணக்க குழுவினரை சந்தித்து தீவிரவாத தாக்குதலின் பின்னர் மத நல்லிணக்கம் குறித்தும், தற்போது மத நல்லிணக்க நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடிருந்தார்.

குறித்த இரு நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரும் அவரது குழுவினரும் கருத்து கூற மறுத்திருந்தனர்.