இந்த சைக்கிள் எப்போது ஓடும்? பகலவன்

Report Print Dias Dias in சமூகம்

தமிழ் மக்களை முட்டாளாக்கும் முயற்சி குறித்து அனுபவசாலியான செ.கஜேந்திரனே குறிப்பிட்டுள்ளார், 40 ஆயிரம் படையினரை சவப்பெட்டியில் அனுப்புவோம் என்ற புகழ்பெற்ற நாடாளுமன்ற உரையை இவர் மறந்தாலும் தமிழ் மக்கள் மறக்கவில்லை என பிரபல கட்டுரையாசிரியர் பகலவன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கட்டுரையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான அதிருப்தியில் தான் மாற்றுத் தலைமை குறித்து மக்கள் சற்றே சிந்திக்கத் தொடங்கினர். எனினும் தற்போது நாளாந்தம் இந்தக் கட்சியினர் வெளியிட்டு வரும் கருத்துகள் இவர்களை ஏமாளிகளாகவே வெளிப்படுத்துகின்றன.

இவர்கள் ஏமாளிகள் ஆனது இப்போதுதான் என்றில்லை. 1960 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோதே இவர்களை ஏமாளியாக்கினார் ஒருவர். அவர் பெயர் அல்பிரட் தங்கராசா துரையப்பா.

தமிழரசுக்கட்சி என்பது தமிழ்க்காங்கிரசில் இருந்து பிரிந்துதான் உருவானது. ஆனாலும் உடனடியாக தேர்தல் திணைக்களத்தில் கட்சியின் பெயருடன் அதன் சின்னம் வீடு என்றும் பதிவு செய்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சி பெயரைப் பதிவு செய்ததே தவிர சின்னத்தைப் பதிவு செய்ய நினைக்கவில்லை. தாங்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டதால் அது தமக்கே சொந்தம் என்ற மிதப்பில் இருந்தனர்.

இந்தப் பலவீனத்தை துரையப்பா நன்கே அறிந்திருந்தார். இத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் அவர் சுயேட்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

உங்களுக்கு என்ன சின்னம் வேண்டும் என தேர்தல் அதிகாரி கேட்டார் சைக்கிள் எனப் பதிலளித்தார் துரையப்பா, பின்னர் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் வந்தார்.

அவரிடமும் இதே கேள்வி. சைக்கிள் தான் எனப் பதிலளித்தார் அவர். அந்தச் சின்னம் ஏற்கனவே துரையப்பாவுக்கு வழங்கியாயிற்று எனக்குறிப்பிட்டார் தேர்தல் அதிகாரி.

அதெப்படி வழக்கமாக நான்தானே அதில் போட்டியிடுவேன். என்று அடம்பிடித்தார் ஜி.ஜி. அதற்கு அந்த அதிகாரி தமிழரசுக்கட்சி தமது பெயருடன் வீட்டுச்சின்னத்தையும் பதிவு செய்துள்ளது.

நீங்கள் கட்சிக்கு சின்னத்தைப் பதிவு செய்யவில்லை எனப் புகழ்பெற்ற ராணிஅப்புக்காத்துவுக்கு விளக்கினார். இந்நிலையில் தனக்கு சைக்கிள் சின்னம் தான் வேண்டும் என துரையப்பா உறுதியாக நின்றார். பொன்னம்பலமும் விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் பூவா தலையா எனப் போட்டுப் பார்ப்பது என முடிவாகிற்று.

அதிலும் துரையப்பாவுக்கே வெற்றி. சைக்கிள் சின்னம் அவருக்கே வழங்கப்பட்டது. பொன்னம்பலத்துக்கு கண்சின்னம் தான் கிடைத்தது. இத்தேர்தலில் துரையப்பாவுக்கு 6313 வாக்குகள் கிடைத்தன. பொன்னம்பலத்துக்கு 6015 வாக்குகள் தான் கிடைத்தன என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவுப்புக்கு முன்னர் வாக்குகளை மீள எண்ணுமாறு பொன்னம்பலம் வேண்டினார். இரண்டாம் மூன்றாம் தடவை எண்ணப்பட்ட போது துரையப்பாவுக்கு கிடைத்த வாக்குகளில் சற்றே சரிவு ஏற்பட்டது. மூன்று தடவைகளுக்கு மேல் எண்ணமுடியாது என தேர்தல் அதிகாரி உறுதியாகச் சொன்னார்.

இந்த வாக்கு எண்ணிக்கை யாழ். மாநகர சபையில் இடம்பெற்றது. பொதுவாக தேர்தல் முடிவடைந்ததும் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு தோல்வியடைந்த வேட்பாளர் கைகுலுக்கி வாழ்த்துவது உலக அரசியல் மரபு. அதற்காக பொன்னம்பலத்தை அழைத்தபோது கதிரையைப் பின்னே தள்ளிவிட்டு “எளிய தமிழ்ச்சாதி” என்று தூற்றிவிட்டு கோபத்துடன் வெளியேறினார்.

ஒரே வருடத்தில் இரண்டாவது தடவையாக துரையப்பாவிடம் தோற்றவர் அல்லவா ஜி.ஜி. மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட துரையப்பா 6201 வாக்குகள் பெற்றார்.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட ஜி.ஜி க்கு 5312 வாக்குகளே கிடைத்தன. சைக்கிளுக்குக் காத்துப் போச்சு பொன்னருக்கு மூச்சுப் போச்சு என்று தமிழரசுக்கட்சிக்காரர் கிண்டல்பண்ணும் நிலையும் உருவாகியது.

ஒரு அநாகரிகமான அரசியலை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் என ஜி.ஜி யை குறிப்பிடலாம். அத்துடன் தமிழரைப் பகிரங்கமாக தூற்றியவரும் அவரே. இதில் முதலாவது விடயத்தில் ஜி.ஜி காட்டிய வழியிலேயே பின்னாளில் மகிந்தவும் நடந்து கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சரத்பொன்சேகாவுடன் கைகுலுக்குவதற்கு அவர் விரும்பவில்லை. தேர்தல் முடிவு அறிவிக்கும் இடத்தை நோக்கிப் பயணமான பொன்சேகாவை இடையில் மறித்து வேறிடத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.

பின்னர் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதற்குப் பிறகே குற்றச்சாட்டுகளைத் தேடி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பொன்சேகா சிறையில் தள்ளப்பட்டார். பீல்ட்மார்ல் பட்டமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இப்போது மக்களை முட்டாள்களாக்க நாங்கள் விரும்பவில்லை என்கிறார் செல்வராசா கஜேந்திரன். ஒரு கட்சி என்ன நோக்கத்தைக் கொண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்பதே முக்கியம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவில் வடகிழக்கு வாக்களிப்பு வீதம் எவ்வளவாக இருந்தது என்பதை அறிந்தபோதே நான் எனது தோல்வியை உணர்ந்து கொண்டேன் எனக் குறிப்பிட்டார் மகிந்த. வடகிழக்கில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார் என்பதே இதன் அர்த்தம்.

இத்தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய முன்னணி வேண்டுகோள் விடுத்தது. இதனை மக்கள் நிராகரித்தனர் என்பதே உண்மையான நிலைப்பாடு.

மக்கள் குறைந்தளவில் வாக்களித்தால் அது மகிந்தவுக்குத்தான் சாதகமாகும் என்பதை விளக்கபெரிதாக அரசியல் அறிவு தேவையில்லை. இவர்கள் மகிந்தவுக்காகத் தான் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறுகின்றனர் என்று எவரும் குற்றஞ்சாட்டியதாகத் தெரியவில்லை.

உண்மையில் தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் கருத்துத் தொடர்பாக மக்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மக்களின் எண்ணவோட்டத்தை நாடிபிடித்து அறிய எந்தக் காலத்திலும் இக்கட்சி முயன்றதாகத் தெரியவில்லை.

(குமார்பொன்னம்பலம் காலத்தைத் தவிர்த்து – அவர் இதய சுத்தியுடனேயே அரசியல் நடத்தினார்)சரியோ பிழையோ ஒரு கட்சியோ இயக்கமோ தமது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

அரசியல் அமைப்பின் 6ஆவது திருத்தம் அரச ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் பிரிவினைக்கு எதிராக சத்தியபிரமாணம் செய்ய வேண்டும் என்பது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அக்காலத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கும் (தற்காலிகமாக) நிலை இதனால் ஏற்பட்டது.

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் தமிழீழ விடுதலை இராணுவம் போன்றவை இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்யக் கூடாது என விடாப்பிடியாக நின்றன.

அக்கால கட்டத்தில் யதார்த்தத்தை உணர்ந்த பிரபாகரன் இந்த விடயத்தில் அரச ஊழியர்கள் சுயமாக முடிவெடுக்கட்டும் என்று அறிவித்தார். ஏனைய இயக்கங்களின் நிலைப்பாட்டுக்கு மாறாக இருந்தது இது. இதனை அரச ஊழியர் வரவேற்றனர்.

தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதற்கு எதிர்மாறாக எடுக்க வேண்டும் என்றே காத்திருக்கின்றனர். சொல் புத்தியோ சுயபுத்தியோ இல்லாதவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?கன்னியா பிள்ளையார் கோயில் விடயத்தையும் சுட்டிக்காட்டலாம்.

கூட்டமைப்புக்கு சாதகமாகப் போய்விடும் என்று நினைத்தே அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கோவைகளை வைத்துக் கொண்டு முழுசிக் கொண்டு நின்றனர் இக்கட்சியினர்.

கடைசியில் இவர்களின் வண்டவாளம் வெளியாயிற்று. இவர்களது செயலற்ற தன்மையைக் கண்ட அக்காணி உரிமையாளரான பெண்மணி எப்படியோ இடைக்காலத் தடை பெற்றுவிட்டார்.

இதற்காக அந்தப் பெண்மணியைத் திட்டித்தீர்த்தனர் எனவும் செய்திகள் வெளியாகின. மொத்தத்தில் சவப்பெட்டிக்காரர்களின் நிலைப்பாடே இவர்களுக்கு. பிச்சைக்காரரின் புண்போல பிரச்சினைகளை நோண்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள்.

மாவீரர்நாள் போன்றவற்றில் இவர்கள் செய்த குழப்படிகள் வியாபாரங்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்குத் தெரியாது என்பது இவர்களது நினைப்பு.

மாற்று அரசியல் என்பது கூட்டமைப்பினரையோ, தமிழ் மக்கள் கூட்டணியினரையோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரையோ திட்டிக் கொண்டிருப்பது மட்டுமல்ல என்ற யதார்த்தத்தை என்று தான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ? உள்ளூராட்சித் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் பேச்சு நடத்தினர்.

பேச்சுத் தோல்வியில் முடிந்ததும் அவர்கள் துரோகிகள் கொலைகாரர்கள் என்றனர். திருக்கோயிலில், பொத்துவிலில் சுதந்திரக்கட்சி, ஜ.தே.க ஆட்சியமைக்க இவர்கள் உதவினர் என்ற உண்மை. மக்களுக்குத் தெரியாது என்ற நினைப்பில் மற்றவர்களின் சுட்டிக்காட்டினால் போதும் என்று நினைக்கின்றனர்.

வரதராஜன் பார்த்தீபன் போன்ற ஆற்றல் உள்ள இளைய தலைமுறையினர் இவர்களின் பின்னால் இழுபட்டுப் போவது வரலாற்றின் சோகம்.

தமது போக்கை மாற்றி புலம்பெயர் தேசத்து ரிமோட் கொன்றோலை தூக்கியெறியாவிடில் இக்கட்சிக்கு விமோசனம் இல்லை. இப்படியே இந்தியா சர்வதேசம் என்று குற்றஞ்சாட்டும் அரசியலைத்தான் தொடர முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.