இலங்கை அரசு முழுவதும் இனப்படுகொலைக் குற்றவாளியே!

Report Print Gokulan Gokulan in சமூகம்
151Shares

ஜனாதிபதி தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவை மட்டும் நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை.

இனப்படுகொலைக் குற்றவாளியாக இலங்கை அரசினையே(state) நாம் பார்க்கின்றோம். இனப்படுகொலை அரசின் முகமாக ஆட்சி புரிந்தவர்கள் அனைவருமே இனப்படுகொலையாளிகளாக உள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத்தீவில் ஜனாதிபதி தேர்தல் களம் பரபரப்படைந்துள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பியபோது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் என்பது சிங்கள தேசத்துக்கான தேர்தலாகவே இருக்கின்றது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்படுகின்ற ஒன்றாகவே இத் தேர்தல் காணப்படுகின்றது.

இப்பார்வை நிலையில் தான் தமிழர் தேசத்தின் இறைமையினை வென்றடைவதற்கான தந்திரோபாயங்களின் அடிப்படையில் இலங்கையின் ஒவ்வொரு தேர்தல்களையும் நாம் அணுகி வருகின்றோம்.

உடனடி சலுகை அரசியலுக்கு அகப்பட்டு முடிவுகளை எடுக்காமல், நீண்ட காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு நன்மை தருகின்ற முடிவுகளை நோக்கியே நமது நிலைப்பாடுகள் அமைகின்றன.

எனவே இவ்விடயத்தில் இறுதி நிலைப்பாட்டினை உரிய நேரத்தில் எமது அரசவை விவாதித்து முடிவெடுக்கும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.