யாழில் ஆவா குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல்!

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மீது ஆவா குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதி ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த விடுதியினை மூடுமாறு ஆவா குழுவால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அந்த விடுதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உரிமையாளரை வாளால் வெட்டியதுடன், விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குவில் ஆடியபாதம் வீதியில் புதிதாக விடுதி ஒன்று திறக்கப்பட்டது. அந்த விடுதியில் சமூக சீர்கேடுகள் நடைபெறுவதாக குற்றம் சுமத்தி, அந்த விடுதியினை மூடுமாறு ஆவா குழு என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தக் கடிதம் விடுதியின் உரிமையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு விடுதிக்குள் புகுந்த சிலர், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் உரிமையாளர் மீது வாள்வெட்டு நடத்தியுள்ளனர். மேலும் விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers