ஜனாதிபதியினால் வீரோதார விபூசண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட சிப்பாய்கள்

Report Print Aasim in சமூகம்
53Shares

சிப்பாய்கள் இரண்டு பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வீரோதார விபூசண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பதக்கம் வழங்கப்பட்ட சிப்பாய்கள் இரண்டு பேரும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மரண ஆபத்தை எதிர்கொண்டிருக்கும் தனிநபர் அல்லது குழுவொன்றைப் பாதுகாப்பதற்காக தனது உயிரை துச்சமாக மதித்து செயற்படும் படைவீரர்களுக்கே இந்தப் பதக்கம் வழங்கப்படுகின்றது.

2016 டிசம்பர் மாதம் 21ம் திகதி ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து களப்பு நீருக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சமயம் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் விமானப்படை சிப்பாய் கோப்ரல் ரத்நாயக்க இந்தப் பதக்கத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

அதே போன்று 2017ம் ஆண்டு நாடு தழுவிய வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் விமானப்படை நடவடிக்கையின் போது கேபிள் அறுந்து போனதன் காரணமாக ஹெலிகொப்டரிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த விமானப்படை அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் யாபாரத்னவும் இந்தப் பதக்கத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். யாபாரத்னவின் விருதை அவரது மனைவி ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மேற்குறித்த சிப்பாய்களுக்கான பதக்கம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட, பாதுகாப்புப் படைகளின் பிரதம அலுவலர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.