மன்னார் மாவட்டத்தில் தொடரும் வறட்சியால் பெரும்பானோர் பாதிப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்தும் நிலவி வரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக மேட்டு நிலப்பயிர்செய்கை பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்ற போதும் மழை சிறிய அளவில் கூட பொழியவில்லை எனவும் இதனால் கிணற்று நீர் வற்றிய நிலையில் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நானாட்டான், மாந்தை, மடுப் பிரதேசங்களில் விவசாய குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச்செய்கைகள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் இறுதி அறிக்கையின் படி, வறட்சி காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள 104 கிராம அலுவலகப் பிரிவுகளில் 18,704 குடும்பங்களைச் சார்ந்த 63,115 நபர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 13,416 குடும்பங்களைச் சேர்ந்த 46,632 நபர்களுக்கு மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை மூன்று லொறி பவுசர்களிலும், ஐந்து டிரக்ரர் பவுசர்களிலும் நாளாந்தம் 7,101 லீற்றர் குடிநீர் வழங்கி வருவதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இவற்றில் மடு, முசலி பிரதேச செயலகப் பிரிவுகளே குடிநீர் பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுத்து வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மடு பிரதேச செயலகப் பிரிவில் 4099 குடும்பங்களும், முசலிப் பிரதேசத்தில் 3,723 குடும்பங்களும் குடிநீர் பிரச்சினைகளுக்கு அதிகமாக முகங்கொடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 8 மில்லியன் ரூபாய் நிதி அரசிடம் கோரியிருக்கின்ற போதும், இதுவரை 2 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், ஏனைய நிதிகள் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரியக் கிடைத்துள்ளது.