சிறீதரன் எம்.பியின் வீட்டிற்கு அருகில் பெருமளவான படையினர் குவிப்பு! தேடுதல் தீவிரம்

Report Print Yathu in சமூகம்

புதிய இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டு வளவிலேயே முதலாவதாக படையினர் தேடுதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் உரிய அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்ததன் பின்னர் தவறுதலாக தேடுதல் நடத்திவிட்டோம் என அடுத்த வளவிற்குள் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் அமைந்திருக்கக்கூடிய காணி ஒன்றில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக இவ்வாறு தேடுதல் மேற்கொள்ளப்படுகின்றது.

அப்பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து இவ்வாறு தேடுதல் நடவடிக்கை மேள்கொள்ளப்படுகின்றது.

இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது கருத்துத் தெரிவித்த சிறீதரன் எம்.பி. புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்களின் இரத்தம் வழிகிறது.

உலக அரங்கில் 20ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலைகளை செய்த சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளீர்கள்.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து சுட்டுக் கொன்றவர் சவேந்திர சில்வா. இசைப்பிரியாவை சுட்டுக் கொன்றவரும் இவர்தான். தமிழர்களான நாங்கள் இதனை ஏற்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டைச் சுற்றி இவ்வாறான தீவிர தேடுதல் மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் யாழ்ப்பாண வீட்டிலும் எவ்வித காரணங்களும் இன்றி பாதுகாப்பு தரப்பினரால் தீவிர தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு பாதுகாப்பு தரப்பினரால் தேடுதல் நடத்தப்படுவது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாதுகாப்பு தரப்பினரால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கி வரும் நிலையில் கூட்டமைப்பின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு இலக்கு வைக்கப்படுவது தொடர்பில் ரணில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்களின் இரத்தம் வழிகிறது